புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்குமான விழிப்புணர்வு செயலமர்வு இன்று(16) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் நிகால் பிரசன்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரச வங்கிகளின் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் திருமதி பவதாரணி கோபிராஜ், மாவட்ட தொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிச் சபையின் அம்பாறை பிராந்திய உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி சபையினால் அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஊழியர் சேம லாப நிதி தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் அவற்றை எவ்வாறு வினைத்திறனுடன் முன்னெடுப்பது சம்பந்தமாகவும் தொழிலாளர்களது உரிமை சம்பந்தமாகவும் இங்கு கலந்து கொண்டவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


