நாவற்காட்டில் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

 

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியீட்டத்தின் கீழ் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா இன்று(30) வரணி, நாவற்காட்டில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தின் நிலையத்தில் நடைபெற்றது.

 

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு நிலையத்துக்கான நினைவுக்கல் ஆளுநர் மற்றும் பிரதம செயலர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட பின்னர் நிலையம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

 

அதன் பின்னர் போத்தல் கள் அடைக்கும் நிலையத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார்.

 

 

தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந. திருலிங்கநாதன், கடந்த காலங்களில் மிதமிஞ்சிய கள்ளை நிலத்தில் ஊற்றும் நிலைமை காணப்பட்டது.

 

பின்னர் அதனை மதுசார உற்பத்திக்காக இவர்கள் வழங்கினர். அதன்போது போத்தலுக்கு 40 ரூபாவே இவர்களுக்கு கிடைத்தது.

 

இதனை மாற்றியமைத்து அவர்களுக்கான வருவாயை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தப் போத்தல் கள் அடைக்கும் நிலையம் அமைத்து வழங்கப்பட்டுள்ளது.

 

இதிலுள்ள இயந்திரங்களும் இந்தச் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களுக்கு ஏற்ற வடிவில் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டார்.

 

வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் தனது உரையில், கூட்டுறவுத்துறையில் வடக்கு மாகாணமே ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது எனக் குறிப்பிட்டார். அத்துடன் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களுக்கு கிடைத்த சொத்துக்களைப் பராமரிக்க வேண்டும் எனவும் இந்தச் சங்கம் அதற்கு முன்மாதிரியாகவும் செயற்படும் என எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன், மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் பொ. வாகீசன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந. திருலிங்கநாதன், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *