திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமம் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் “சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத்திட்டம்” உற்பத்தித் திறன் மூலம் வளமான கிராமத்தை கட்டியெழுப்பும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் ஒழுங்கு மற்றும் சமூக நிலையை உயர்த்துவதற்கும், கிராமத்தின் உற்பத்தித்திறன், கலாசாரம், ஆன்மீகக்குணங்கள், நற்பழக்கவழக்கங்களினூடாக உற்பத்தித்திறனை அதிகரிப்பது சம்மந்தமான கருத்தரங்கானது திருக்கோவில் பிரதேச செயலக உற்பத்தித்திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தேசத்தை வளக்கும் மக்களால் நிறைந்த ஒரு கிராமத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் தெளிவூட்டல்களும் இதன் நோக்கங்களும் அதிகாரிகளினால் நிகழ்த்தப்பட்டது.
மேலும் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் குறிக்கோள் உற்பத்தித்திறன் கருத்துக்கள் மூலம் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் தனிநபர், வீடு மற்றும் சமூக உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிறைந்த உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகும்.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உஷாந், சமுர்த்தி தலைமைப்பிட முகாமையாளர் அரசரெட்ணம், உற்பத்தித் திறன் செயலகப்பிரிவின் அபிவிருத்தி உத்தியோத்தர் திரு. வக்சலா சசிகலா மற்றும் வளவாளராக அம்பாறை மாவட்ட செயலக உற்பத்தித் திறன் அபிவிருத்தி உத்தியோத்தர் ஜனாப் அர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோத்தர்கள், உற்பத்தி நிறுவனங்களின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

