செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவரை கடந்த சனிக்கிழமை (08) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த 42 வயதுடைய வரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு அன்றைய தினம் ஆள் அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு இடம்பெறும் என கட்டளையிட்டு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய போது அவருக்கு எதிராக முறைப்பாடு செய்த மூன்று பேரும் அடையாளம் காண்பித்த இதையடுத்து நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை இவ்வாறு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போலி நடித்து வந்துள்ள இவர் உயர்கல்வியில் விஞ்ஞான பாடம் கற்றுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்து வந்த அவர் கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை தயாரித்து கொடுத்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை நீதவான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

