வெற்றி பெறுவதற்கு எங்களுக்கு எந்த விதமான சவால்களும் இல்லை – ஏ. ஆதம்பாவா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சாதாரண தேர்தல். இதிலே வெற்றி பெறுவதற்கு எங்களுக்கு எந்த விதமான சவால்களும் இல்லை நிச்சயம் சபைகளை கைப்பற்றுவோம் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.
காரைதீவில் இன்று(03) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அது போன்று பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றோம். இது ஒரு சாதாரண தேர்தல் இதிலே வெற்றி பெறுவதற்கு எங்களுக்கு எந்த விதமான சவால்களும் இல்லை நிச்சயமாக நாங்கள் சபைகளை கைப்பற்றுவோம்.

நாங்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கு கற்ற புத்திஜீவிகளை, சிறந்த கல்விமான்களை, மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை இனம் கண்டு தேர்தலில் நிறுத்தியுள்ளோம். எனவே அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை எமக்கு உள்ளது.
எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாக இந்த மக்கள் எதனை சாதிக்க போகின்றார்கள். எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் கட்சியாகிய எமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதன் ஊடாக உள்ளூராட்சி மன்ற பிரதேச தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்று விட்டு ஒரு முஸ்லிம் தலைமை டெலிபோன் சின்னம் செத்துப் போய்விட்டது என்று கூறி வருகின்றது. இவர்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு விதமாக பேசுகின்றனர். இவ்வாறு பொய்களை உரைக்கின்ற அவர்களுக்கு பின்னால் முஸ்லிம்கள் ஒருபோதும் நிற்பதற்கு தயார் இல்லை என்பதை கடந்த கால தேர்தல்கள் எங்களுக்கு உணர்த்தியது. எனவே தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு முழுமையான ஆதாரவை மக்கள் வழங்கினார்கள். அது போன்று இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் அமோகமான வாக்குகளால் நமது மக்கள் தேசிய மக்கள் கட்சியை வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் அல்ல முழு இலங்கையிலும் அபிவிருத்தி என்ற போர்வையிலே பல்வேறு பித்தலாட்டங்கள் ஊழல்கள் இடம்பெற்றதை நாங்கள் அண்மைக்காலமாக அறிந்து வருகிறோம். அதற்கான தண்டனைகளையும் பலர் பெற்று வருகின்றார்கள்.  அம்பாறை மாவட்டத்திலும் அதே நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனை சரி செய்து பல்வேறு கிடப்பில் இருக்கின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பூரணப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *