இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களை ஆளுநர் பார்வையிட்டார்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களை இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரட்ண சேகர
நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் தொடர்பான குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் துப்புரவு செய்தல், திருத்தம் செய்தல் குடிநீர் வசதி வழங்கள் வீதிகளை சீரமைப்பபு செய்தல் மற்றும் நிவாரண உதவி வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்தி வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார். மக்களுக்கான குடிநீர் வசதிகளையும், வீதி செப்பனிடல் வசதிகளையும் பிரதேச சபை திறம்பட மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அத்துடன் பிரதேச செயலகமானது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைத் துப்புரவு செய்தல் மற்றும் வீடுகள் திருத்தம் தொடர்பான விடயங்களுக்கான முற்பண நிதிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

இதன்போது வாகரை பிரதேச செயலாளர் அமலினி, வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் மற்றும் கைத்தொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் செயலாளருமான திலிப்குமார் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

தற்போது வெள்ள நீர் உரிய இடங்களில் படிப்படியாகக் குறைவடைவதனால் எதிர்வரும் ஒரு சில தினங்களில் மக்களின் இயல்பு நிலமை வழமைக்குத் திரும்பும் நிலை காணப்படுவதால் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்குத் திரும்பக் கூடிய சூழ்நிலை உள்ளதாக பிரதேச செயலாளர் இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *