படுவான் கரை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை செய்கை மேற்கொண்ட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை விவசாய அமைச்சு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் உழவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
கமநல சேவைகள் நிலைய பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் கலியுகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோறிச்சரத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சச்சிதானந்தக்குருக்கள் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜகன்நாத் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக மண்முனை தென் மேற்கு பிரதேசசசபையின் தவிசாளர் திரேசகுமாரன், கமக்காரர் அமைப்புகளின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரசபையின் தலைவர் ந்திரமோகன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உழவர்களின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் எருதுடன் விவசாயிகள் உழவு செய்யும் கலப்பையுடன் கூடிய உழவரின் உருவச்சிலை இதன்போது திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது உழவர் சிலையாக இந்த உழவர் சிலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


