தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வாக சமஸ்டி அரசியல் யாப்பினைக்கொண்டு வருவதற்கான இலங்கைக்கு சர்வதேச அழுத்தங்களைக் கொண்டு வருவதற்காக முதல் கட்டமாக இந்திய தமிழக தலைவர்களை சந்திப்பதற்காக தமிழ்த் தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அரசியல் பிரமுகர்கள் கொண்ட குழுவினர் இன்று(16) இந்தியாவின் தமிழகத்துக்கு பயணமாகியுள்ளனர்.
இந்தப் பயணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், உத்தியோகப்பூர்வ பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் மற்றும் பிரச்சாரச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் அரசியல்த் தலைவர்களைச் சந்தித்து தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வாக சிறிலங்கா அரசு ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல்த் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது. இவ்விடயங்களைத் தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபட உள்ளோம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

