திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவை இன்மையால் பயணிகள் சிரமம்

திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படாமையினால் உள்ளுர் பயணிகள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்திற்கான ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டிருந்தமையினால் திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த பாதைகள் சீரமைக்கப்பட்டு சரக்கு ரயில் சேவை கடந்த 16.12.2025 அன்றில் இருந்து இடம்பெற்று வருகின்போதும் பயணிகளுக்கான ரயில் சேவை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இதனால் ஒவ்வொரு நாளும் பெருமளவான பயணிகள் ரயில் நிலையத்திற்கு சென்று திரும்பி வருவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருகோணமலை – கொழும்பு இரவு நேர ரயில் சேவையானது சுமார் 100 தொடக்கம் 150 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒருசில இடங்களில் ரயிலுடன் யானைகள் மோதுண்டு இறக்கின்றமையினால் ரயில் சாரதிகளின்மீது வனஜீவராசிகள் திணைக்களம் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இதனால் சாரதிகள் சங்கத்தினரும் தம்மீதான சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

இதனால் இரவு நேர சேவையினை நிரந்தரமாக நிறுத்தி பகல் நேர ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் யானைகள் குறுக்கிடுகின்ற பகுதிகளில் மெதுவாக செலுத்துவதற்கான ஆலோசனையும் ரயில் சாரதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பெருமளவான பயணிகள் கொழும்பில் தங்களுடைய வேலைகளை நிறைவேற்றிவிட்டு அன்றைய தினம் திரும்புவதற்காக இரவு நேர ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.

நாளாந்தம் 800 தொடக்கம் 1000 வரையிலான பயணிகள் பயணம் செய்வதாகவும் இதன்மூலம் 8 இலட்சம் தொடக்கம் ஒரு மில்லியன் வரை வருமானம் கிடைப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனால் இரவுநேர ரயில் சேவை நிறுத்தப்படுமானால் பெருமளவான பயணிகள் பாதிக்கப்படுவதோடு ரயில் நிலையத்தின் வருவாயும் பாதிக்கப்படும்.  எனவே இரவு நேர ரயில் சேவையை விரைவில் ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *