மட்டக்களப்பில் பிரதான வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில், லகூன் பூங்கா தொடக்கம் கல்லடிப்பாலம் வரையுள்ள பிரதான வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நகரின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கிலும், மழைக்காலங்களில் ஏற்படும் நீர்த்தேக்கங்கள் மற்றும் வெள்ள அபாயங்களைத் தடுக்கும் நோக்கிலும் இத்துப்பரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் தீவிரமாக முன்னெடுத்ததுடன், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையும் சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.
இதன் மூலம் பிரதான வடிகான்களில் தேங்கியிருந்த குப்பைகள், சேறு மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, நீர் சீராக ஓடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும், இத் துப்புரவுப் பணிகளில் மாநகர ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயனும், மாநகர சபை உத்தியோகத்தர்களும் நேரடியாகக் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்களின் கண்காணிப்பின் கீழ் பணிகள் திட்டமிட்ட முறையில் மற்றும் விரைவாக நிறைவேற்றப்பட்டன.
மாநகர சபையின் இவ்வகை ஒருங்கிணைந்த முயற்சிகள் நகரின் சுத்தம், சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எதிர்காலத்திலும் இதுபோன்ற துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மாநகர சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *