வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவரின் மூன்றரை இலட்சம் பெறுமதியான ஐபோன் 15 புரோ கைத்தொலைபேசி அண்மையில் களவு போயிருந்தது. குறித்த தொலைபேசியை காணவில்லை என வைத்தியர் பல இடங்களில் தேடியும் அது கிடைக்கப்பெறவில்லை.
விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸாரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியமையினை அடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் படி ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளதுடன், சந்தேக நபரிடமிருந்து கைத்தொலைபேசியையும் மீட்டெடுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜே.எச்.பி.சஜீவ சம்பத் குமாரவின் உத்தரவுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவும் குற்றத்தடுப்புப்பிரிவினரும் இணைந்து பிரிவுப்பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான 39210-வீரசிங்க, 8656-தினேஷ், 92658-அக்ரம், 40258-றிஷோ மற்றும் விஷேட பிரிவைச்சேர்ந்த பயாஸ், விஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் குறித்த கைது நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

