உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான சபைகளில் எவருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் இருப்பதாகவும் அனைத்து சவால்களை கடந்து தமது அணியினர் காத்தான்குடி நகர சபையில் அனைத்து வட்டாரங்களையும் வெற்றி கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இன்று(07) அவர் வெளியிட்ட விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் நகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகளில் எவரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுகிறது. இருந்தபோதிலும் இவ் இரண்டு சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான அனைத்து வியூகங்களையும் தாம் வகுத்துள்ளதாவும் இந்த இரண்டு சபையும் முஸ்லிம் காங்கிரஸே கைப்பற்றும் எனவும் அதில் எமக்கு எந்த சவாலும் இல்லை எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று, எமது கட்சிக்கு வாக்களித்த உடன்பிறப்புக்கள் மற்றும் கட்சியின் வெற்றிக்காக அயராது உழைத்த கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், போராளிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.