அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது திடீர் இராணுவ தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான நீண்டகால பதற்றத்துக்குப் பிறகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஈரான் நேரப்படி நேற்று(28) காலை 09:30 மணிக்கு முன்னதாக, தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத்தொடர்ந்து, ஈரான் ஜனாதிபதி அலுவலகமும் இன்று(01) குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. குறித்த நாட்டின் பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலின் தொடர்ச்சியாக, ஈரான் உச்ச தலைவர் காமனெயி உயிரிழந்துள்ளாரென்று ட்ரம்ப் இன்று அறிவித்துள்ளார். பின்னர் ஈரான் அரசு தொலைக்காட்சியும் அதனை உறுதி செய்துள்ளது.
இஸ்பஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா உள்ளிட்ட பல நகரங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு அருகில் இருந்தவர்கள் ஓடுவதைக் காட்டுகின்றன. அலறல் சத்தங்களும் அழுகை சத்தங்களும் பின்னணியில் கேட்கின்றன. உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது தெரியவில்லை.
தலைநகர் டெஹ்ரான் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கூட்டுத் தாக்குதல்களை முற்றிலும் சட்டவிரோதமான தாக்குதல். ஈரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது அனைத்து தற்காப்பு மற்றும் இராணுவத் திறன்களையும் சட்டப்பூர்வமான சுய பாதுகாப்பு உரிமையின் கீழ் பயன்படுத்தும். என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்திற்கு முன்பு, அமெரிக்க இராணுவம் ஈரான் மீது பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது. ஈரானிய ஆட்சியிடமிருந்து வரவிருக்கும் அச்சுறுத்தல்களை ஒழிப்பதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை உறுதி செய்வதே அமெரிக்காவின் குறிக்கோள். ஈரானிய மக்கள் தங்குமிடங்களிலேயே இருங்கள், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். நாங்கள் தாக்குதல்களை முடித்ததும், உங்கள் அரசாங்கத்தை நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அதைப் பெற்றுக்கொள்வது உங்கள் கையில் இருக்கும் உரிமையாகும். தலைமுறை தலைமுறையாக உங்களுக்குக் கிடைக்கப்போகும் ஒரே வாய்ப்பு இதுவாகத்தான் இருக்குமென டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஈரானிய மக்களும் அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமான மற்றும் அமைதியான ஈரானைக் கொண்டு வர வேண்டும். மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை ஏந்தியிருக்கக் கூடாது. எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான ஈரானிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்குமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளதுடன் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து இஸ்ரேலிய குடிமக்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

