நுவரெலியா, நானுஓயாவில் பல எரிபொருள் நிலையங்கள் திடீர் மூடல்

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் பொதுமக்கள் இன்றும்(02) இரண்டாவது நாளாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

 

நிலவும் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளன.

 

ஒரு சில நிலையங்களில் எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் “பெட்ரோல் இல்லை” என்ற அறிவிப்புப் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறிப்பாக, வாடகை முச்சக்கர வண்டியில் நுவரெலியாவிற்கு வருகை தந்த இரு வெளிநாட்டுப் பிரஜைகள், நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததைக் காணக்கூடியதாக உள்ளது.

 

சந்தையில் நிலவும் தேவையை விடவும் அதிகமான அளவில் நுகர்வோர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்து சேமிக்க முயற்சிப்பதாலேயே, நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் இவ்வாறான தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *