தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ்க் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் விசேட கலந்துரையாடல் நேற்று(02) நடைபெற்றது.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்தை வேகப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என்று தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா மண்டபத்தில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிதையாமல் பாதுகாப்பதற்கும் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் ஒருமித்த குரலில் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இவ்வாறானதொரு மேடை அவசியமாகின்றது.
வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்றக் கட்சிகள் யாவும் ஒரு சில முக்கியமான விடயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு மூடிய அறை கூட்டமாக அமைந்திருந்ததுடன் அங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடாகக் கருதப்படும். வரும் காலங்களில் மிக விரைவில் மீண்டும் கூடி பிரதானமான பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம்.” – என அவர் மேலும் தெரிவித்தார்.

