கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 1,332 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதுவர் அமீர் சயீத் இரவானி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தூதுவர் இரவானி, ஈரானிய செம்பிறை சங்கத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி இதனை குறிப்பிட்டுள்ளார்.
பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் உள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுமக்கள் வசிக்கும் இடங்களையோ அல்லது பொதுக் கட்டமைப்புகளையோ இலக்கு வைக்கும் கொள்கை தங்களுக்கு இல்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.
இருப்பினும், ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலையின் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் குறித்து அமெரிக்கா தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
அதேசமயம், இஸ்ரேல் தரப்பில் ஈரான்தான் தங்களது நாட்டுப் பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதாகப் பதிலுக்குக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக ஈரான் முழுவதும் வீடுகள், வணிக மையங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் என 3,600-க்கும் மேற்பட்ட இடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் உயர்மட்டத் தலைவர்களின் மறைவைத் தொடர்ந்து பெப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த மோதல், தற்போது மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், இந்த நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும், பொதுமக்களின் துன்பங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

