டிக்கோயா பிணவறைச் சம்பவம்; மூன்று ஊழியர்களுக்கு எதிராகப் பெற்றோர்கள் முறைப்பாடு

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, மூன்று சிற்றூழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யுவதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக யுவதியின் பெற்றோர் நேற்று மாலை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த தனது மகளின் சடலத்துக்கு ஏதோ விபரீதம் நேர்ந்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக யுவதியின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா காட்சிகள் முழுமையாக தமக்கு காண்பிக்கப்படவில்லை என்றும், காண்பிக்கப்பட்ட காட்சிகளில் குறித்த மூன்று ஊழியர்கள் பிரேத அறைக்குச் சென்று வருவது தொடர்பான காட்சிகள் சுமார் 59 விநாடிகள் மட்டுமே உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த ஊழியர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாங்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் யுவதியின் தாய் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *