தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் ஏ குழு போட்டி; இலங்கை படுதோல்வி

இந்தியாவின் அருணாச்சலம் பிரதேசத்தில் யூப்பியா, கோல்டன் ஜுபிளி விளையாட்டரங்கில் நேற்று(09) இரவு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் ஏ குழு போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவிடம் 0 – 8 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி அடைந்தது.

இந்திய வீரர்களின் விவேகம், வேகம், புத்திசாதுரியம் ஆகியவற்றுக்கு ஈடுகொடுப்பதில் இலங்கை வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். அத்துடன் அணித் தலைவர் ஒமித் எதிரிசிங்க, கோல்காப்பாளர் நடால் ஆரோன் சேனபால உட்பட பின்கள வீரர்கள் இழைத்த தவறுகள் இலங்கையின் படுதோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய இந்தியா சார்பாக டெனி மெய்டெய் 3 கோல்களையும் ப்ரஷான் ஜாஜோ 2 கோல்களையும் மொஹமத் அர்பாஷ், ஒமாங் டோடம், அணித் தலைவர் சிங்கமாயும் ஷமி ஆகியோர் தலா ஒரு கோலையும் புகுத்தினர்.

போட்டியின் 17ஆவது நிமிடத்தில் மைதானத்தின் இடப்புறமாக பந்தை தனி ஒருவராக நகர்த்திச் சென்ற ப்ரஷான் ஜாஜோ கோல் வாயிலுக்கு அருகில் சற்று கடினமான கோணத்திலிருந்து அபாரமாக முதலாவது கோலைப் புகுத்தி இந்தியாவை முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் இந்தியா கோல் மழை பொழியத் தொடங்கியது.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில் ஓமாங் டோடம் இடப்புறத்திலிருந்து உயர்வாகப் பரிமாறிய பந்தை டெனி மெய்டெய் தனது தலையால் முட்டி அணியின் இரண்டாவது கோலைப் போட்டார்.

ஆறு நிமிடங்கள் கழித்து டெனி மெய்டெய் தனது இரண்டாவது கோலைப் போட்டார். சொஹும் உத்ரேஜா பரிமாறிய பந்தை 21 யார் தூரத்திலிருந்து இடதுகாலால் மிகப் பலமாக உதைக்க அது கோலினுள் புகுந்தது. அந்த சந்தர்ப்பத்தில் திகைத்துப்போன இலங்கை கோல்காப்பாளர் நடால் ஆரோன் சேனபாலவினால் பந்தை தடுக்க முடியவில்லை.

இடைவேளைக்கு 3 நிமிடங்கள் இருந்தபோது டெனி மெய்டெய் பரிமாறிய பந்தை ப்ரஷான் ஜாஜோ தலையால் தட்டிக்கொடுக்க கோல் வாயிலில் இருந்தவாறு மொஹமத் அர்பாஷ் அணியின் 4ஆவது கோலைப் போட்டார்.

இடைவேளையின்போது இந்தியா 4 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய களத்திலும் குறிப்பாக பின்களத்திலும் இழைத்த தவறுகளால் மேலும் 4 கோல்களை இலங்கை தாரைவார்த்தது.

போட்டியின் 48ஆவது, 50ஆவது நிமிடங்களில் இந்தியா அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு இலங்கையை தடுமாறச் செய்தது.

இலங்கை அணியின் பெனல்டி எல்லையில் மொஹமத் கதீமின் தவறினால் பந்தைப் பெற்றுக்கொண்ட ஒமாஹ் டோடம், எதிரணி வீரர்கள் இருவரைக் கடந்து சென்று கோல்காப்பாளர் சேனபாலவின் கால்களுக்கு ஊடாக இந்தியாவின் 5ஆவது கோலைப் போட்டார்.

இரண்டு நிமிடங்கள் கழித்து இலங்கை அணியின் பின்கள வீரரும் அணித் தலைவருமான ஓமித் எதிரிசிங்க இழைத்த மிக மோசமான தவறைப் பயன்படுத்தி டெனி மெய்டெய் மிக இலாவகமாக தனது 3ஆவது கோலைப் புகுத்தினார். (இந்தியா 6 – 0)

போட்டியின் 62ஆவது நிமிடத்தில் இந்திய அணித் தலைவர் சிங்கமாயும் ஷமி தலையால் முட்டிய பந்தை கோல்காப்பாளர் சேனபாலவினால் சரியாக பிடிக்க முடியாமல் போனது. அந்த சந்தர்ப்பத்தில் வேகமாக செயல்பட்ட ப்ரஷான் ஜாஜோ தனது இரண்டாவது கோலைப் புகுத்தினார்.

இந்தியாவின் எட்டாவதும் கடைசியுமான கோலை அணித் தலைவர் சிங்கமாயும் ஷமி புகுத்தினார்.

மைதானத்தின் இடப்புறத்தில் பந்தைப் பெற்றுக்கொண்ட ஷமி, மிக சாதுரியமாக இலங்கையின் பின்கள வீரர்களைக் கடந்து சென்று மிகவும் கடினமான கோணத்திலிருந்து கோல் போட்டு அசத்தினார்.

இந்தப் போட்டியில் இலங்கை வீரர்களைப் பொறுத்த மட்டில் ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் தடுமாற்றத்துடனேயே விளையாடினர். ஓரிரு சந்தர்ப்பங்களில் மாத்திரமே இலங்கை வீரர்களால் இந்திய எல்லைக்கு பந்தைக் கொண்டு செல்ல முடிந்தது.

இலங்கையில் இளையோர் கால்பந்தாட்டத்திற்கு முறையான திட்டங்கள் இல்லாததும் போட்டித்தன்மையுடன் கூடிய சுற்றுப் போட்டிகள் இல்லாததுமே இந்தப் படுதோல்விக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, எதிர்காலத்திலாவது இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கமும் இணைந்து பாடசாலைகள் கால்பந்தாட்டத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்பந்தாட்டப் பிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *