“எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக” – ஏவுகணையில் எழுதப்பட்ட வாசகம்

அண்மையில் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சையை குறிப்பிட்டு ஒரு ஏவுகணையில் எழுதப்பட்ட வாசகம் குறித்து உலகளவில் கவனம் திரும்பியுள்ளது.

“எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக” என்ற வாசகம் அந்த ஏவுகணையில் எழுதப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள தனியார் தீவுடன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர் என முன்பு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இராணுவ நடவடிக்கைகளில் வெடிமருந்துகள் அல்லது ஏவுகணைகளில் அரசியல் அல்லது குறியீட்டு செய்திகளை எழுதுவது உலகின் பல்வேறு இராணுவ மற்றும் துணை ராணுவக் குழுக்களால் எதிரிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பும் உளவியல் அல்லது தகவல் போரின் ஒரு முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தச் சம்பவமும் அதேபோன்ற ஒரு உளவியல் அல்லது தகவல் போரின் வெளிப்பாடாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் கடத்தல் மற்றும் குற்றவியல் விசாரணைகளின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களே “எப்ஸ்டீன் கோப்புகள்” என அழைக்கப்படுகின்றன.

அந்தக் கோப்புகளில் எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் பயணம் செய்ததாகக் கூறப்படும் பல பிரபலங்களின் பட்டியல், உலகப் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சுமார் 180,000 புகைப்படங்களும், 2,000 காணொளிகளும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் எப்ஸ்டீனின் முன்னாள் ஊழியர்கள் வழங்கிய விரிவான சாட்சியங்களும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டம்” மூலம் இந்த ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி வரை பல கட்டங்களாக வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆவணங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதனைச் சுற்றிய அரசியல் மற்றும் தகவல் போர் தொடர்பான பல்வேறு கருத்துக்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *