தலைநகர தமிழர்களின் கல்விக் கட்டமைப்பு சிதைவதற்கு, சிறுமி அம்சிகாவின் அகால மரணம் காரணமாக அமைந்து விட கூடாது. நீதி நிலை நாட்டப் பட வேண்டும். சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை வெளியே வர வேண்டும்.
ஆனால், கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும் கல்வி என்ற கட்டமைப்பின் ஏணிகளான எங்கள் ஒட்டு மொத்த நல்லாசிரியர் சமுதாயத்தை, அவமானம், அதிருப்தி, அதைரியம், விரக்தி ஆகிய உணர்வலைகளுக்குள் ஒருபோதும் தள்ளி விடக் கூடாது. “ட்யூடரிகள்” என்ற தனியார் வகுப்புகள் வேறு, எமது தேசிய, மாகாண பாடசாலைகள் என்பன வேறு, என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
ஆகவே, சமூக அழுத்தங்களைத் தரும் போராட்டங்களும், சமூக ஊடகங்களும் “நீதியை கோர” வேண்டுமே தவிர, வரம்பு மீறி, எமது ஆசிரியர் சமூகத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவமானபடுத்தி விட முனைய கூடாது என மனோ கணேசன் எம்பி விசேட அறிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி விடுத்துள்ள விசேட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
கொழும்பு பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், நடந்த சம்பவம் பற்றிய தனது அறிக்கையை, மாதங்களுக்கு முன்பே உரிய வேளையில் கல்வி அமைச்சிடம் சமர்ப்பித்து விட்டார் என்றும், குறிப்பிட்ட அறிக்கை அடங்கிய கோப்பை பரிசீலித்து நடவடிக்கைகளை எடுக்க கல்வி அமைச்சு அதிகாரிகள் தவறி விட்டார்கள் என்றும் இப்போது அறிகிறேன்.
அப்போதே கல்வி அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் விவகாரம் இந்தளவு தூரம் வந்து இருக்காது. இது எதுவும் அறியாமல் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த நாள் நாடாளுமன்றத்துக்கு வந்து அறிக்கை கோருகிறார். மேலும், சம்பவம் கைமீறிப் போய் மக்கள் தெருவுக்கு வந்த பின்னர், நானும் இதை நாடளுமன்றத்தில் பிரஸ்தாபித்த பின்னர், “இடமாற்றம்” என்றும், “கட்டாய விடுமுறை” என்றும் அவரது அமைச்சு அவசர அவசரமாக தடுமாறியமை காலம் கடந்த செயல்கள், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சமூகத்தில் இன்று நான் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கின்றேன் என்றால் அதன் பின்னால் எனக்கு கற்றுத் தந்த நூற்றுக்கணக்கான நல்லாசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எனக்கு கல்வியை மட்டும் கற்றுத் தரவில்லை. பண்பாடு, நாகரீகம் உள்ளிட்ட நற்பண்பு கலாசாரத்தையும் கற்றுத் தந்தார்கள். “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்றும் மிக தெளிவாக திருக்குறள் பொய்யாமொழியை என் மனதில் ஆழமாக பதித்து சென்றார்கள்.
சிறுமி அம்சிகா விவாகரத்தை முதன் முதல் நாடாளுமன்றத்தில், விசேட தேசிய பிரச்சினையாக நான் முன் வைத்த போது, நான் எவரது பெயர்களையும் குறிப்பிடவில்லை. பாடசாலைகளின் பெயர்களைக் கூட குறிப்படவில்லை. தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு உட்பட அரசின் அசமந்தப் போக்கை சுட்டிக் காட்டி, நியாயத்தைக் கோரி மட்டுமே பேசினேன். பெண்கள், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் எனக்குத் தந்த பொறுப்பற்ற பதில்களை கண்டித்து மட்டுமே பேசினேன்.
அரசியல் இலாபம் பெறவும் நான் இந்த விவகாரத்தை பயன்படுத்திப் பேசவில்லை. அரசியல் ஆதாயம் தேவை என்றால், அகால மரண சம்பவம் நடந்த 29ம் திகதிக்கு, அடுத்த நாளே விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, ஆளும் கட்சியின் வடகொழும்பு அமைப்பாளர் மீது அரசியல் குற்றசாட்டுகளை முன் வைத்து, நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வாக்கு வேட்டை நடத்தி இருக்கலாம். அதை நான் செய்யவில்லை. அப்படியான வாக்குகள் எனக்குத் தேவையும் இல்லை. “இது அரசியல் அல்ல, நீதி கோரல்”, என நான் இதை நாடாளுமன்றத்தில் சொன்ன போது, தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட அமைச்சர்களான எனது நண்பர்கள் சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் உடன்பட்டார்கள்.
எனக்கு கல்வியும், நற்பண்பு கலாசாரத்தையும் கற்றுத் தந்த நல்லாசிரியர்களின் அன்றைய வழிகாட்டல்கள் காரணமாகவே நான் பொது வெளியிலும், பாராளுமன்றத்திலும் கண்ணியமாக நடந்து கொள்கிறேன். ஆகவே எக்காரணம் கொண்டும் நமது நல்லாசிரியர்கள் மனம் தளர்ந்து, விரக்தி அடையும் விதத்தில் சிறுமி அம்சிகாவுக்கு நீதி கோரும் போராட்டத்தை, சமூகமும், சமூக ஊடகங்களும் கொண்டு செல்லக் கூடாது என மிக உறுதியுடன் கூறுகிறேன்.
தலைநகர தமிழர்களின் தேசிய பாடசாலைகள், மாகாணசபை பாடசாலைகள் அடங்கிய தமிழர் கல்வி கட்டமைப்பு சிதைந்து விட்டால், நமது ஒட்டு மொத்த மாணவர் சமூகமே மிகபெரும் பாதிப்புகளை அடையும். அதற்கு இடம் கொடுத்து விட கூடாது என்ற பேருண்மையை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்றும் கோருகிறேன்.