விட்டுக்கொடுப்புகள் மூலமாக சபைகளை அமைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு – சிறிநேசன் எம்.பி

புரிந்துணர்வு விட்டுக் கொடுப்பு, பெருந்தன்மை, என்ற அடிப்படையில் சபைகளை அமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதனை எமது கௌரவ உறுப்பினர்கள் தங்களுடைய கௌரவத்தை தாழ்த்திக் கொள்ளாமல் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போதைய சில சூழ்நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் சபைகளை அமைக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்ற பிரதிநிதித்துவ முறை என்பது ஒரு சிக்கலான பிரதிநிதித்துவ முறையாகும். இதன் ஊடாக வட்டாரத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், பட்டியல் மூலமாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள், தொங்கு நிலை ஆசனங்கள் பெற்றவர்கள், என மூன்று வகையான உறுப்பினர்கள் பல சபைகளில் இடம்பெற்றிருக்கின்றார்கள். இந்த நிலையில் ஆளுங்கட்சியாக இருந்தால் என்ன அல்லது எதிர்க்கட்சிகளாக இருந்தால் என்ன எல்லாக் கட்சிகளுக்கும் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் சிரமங்கள், சிக்கல்கள், காணப்படுகின்றன. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தில் தமிழரசுக் கட்சியை பொறுத்த அளவில் கணிசமான ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றி இருக்கின்றது.

இந்த நிலையிலும் மூன்று வகையான நிலமை காணப்படுகின்றது. முதலாவது தனித்து நின்று ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. ஓரிரு ஆசனங்களை மேலும் பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது. இன்னும் சில சபைகளை அமைப்பதில் சவாலாகவும் காணப்படுகின்றன. எமது கட்சியில் பலர் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தார்கள் அவ்வாறு விண்ணப்பித்திருந்தும் பலருக்கு போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறானவர்கள் உங்களுடைய பலத்தைக் காட்டுவதற்காக பலர் போட்டியிட்டு தமிழ் தேசிய உணர்வோடு வெற்றி பெற்றிருக்கலாம். அவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது யாதெனில் கடந்த காலத்தில் வேட்பாளர் தெரிவில் சில தவறுகளிடம் பெற்றிருக்கலாம். எனவே நீங்கள் தமிழ் தேசிய உணர்வு உள்ளவர்கள் சற்று விலகி இருந்தாலும் உங்களுடைய தாய் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அதுபோல் தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ் தேசியக் கொள்கையோடு ஒத்த கொள்கையாகப் பயணிக்கின்ற கட்சிகளும் இருக்கின்றன. அக்கட்சிகள்கூட சில ஆசனங்களை பெற்றிருக்கின்றன. அக்கட்சிகளும் வேறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலையில்லை. அவ்வாறான கட்சிகளும்கூட தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்க வேண்டும்.

இதற்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டம் என்பது பல்லின சமூகத்தை கொண்ட மாவட்டமாகும். நாம் கடந்த காலத்தில்கூட முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் தெரிவித்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்ஸ்புல்லாவும்கூட இதனை வெளிப்படுத்தி இருந்தார். உண்மையும் கூட அவர்களுக்கு தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் அவர்களுக்கும் ஆட்சி அமைப்பதற்கு எமது உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. ஒரு சில சபைகளில் நாங்களும் ஆட்சி அமைப்பதற்கு அவர்களுடைய ஆதரவு தேவைப்படுகின்றது. இது எந்த கட்சியாக இருந்தாலும் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படுகின்றது.

எனவே எந்த ஒரு நிலையிலும் நாங்கள் அடம் பிடித்துக் கொண்டு நிற்க முடியாத நிலைமை காணப்படுகிறது. கடந்த காலத்தில்கூட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவும் இதனைக் குறிப்பிட்டு இருந்தார்.

பரஸ்பரம் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்கின்ற பிரதேசங்களில் சபைகளை அமைப்பதற்கு தமிழ்க் கட்சிகளின் உதவிகளை அவர்கள் நாடுகின்றார்கள். தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஒரு சில சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவினை வேண்டப்படுகின்ற காரணத்தினால் இதனை எல்லாம் விமர்சனம் செய்து பெரிதுபடுத்த வேண்டிய நிலைமை இல்லை. எனவே தமிழ் தேசியப் பரப்பிலே இருக்கின்ற கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்கலாம். அதேபோன்று பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கக் கூடிய விதத்தில் தமிழ் பேசுகின்ற கட்சிகள் என்ற அடிப்படையில் இணையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு இடையில் நாம் பதவிகளுக்காக நம்மிடையே போட்டியிட்டுக் கொண்டிருக்காமல் விட்டுக்கொடுப்புகள் மூலமாக சபைகளை அமைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே மூன்று சபைகளை முஸ்லிம் மக்கள் அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஏனைய ஒன்பது சபைகளையும் தமிழ் மக்கள் சார்ந்த தமிழ் தேசியக் கட்சிகள் சபைகள் அமைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இதனை வாத பொருளாகவோ, விதண்டாவாதங்களாகவும், மாறாமல் நடைமுறை சாத்தியத்தின் அடிப்படையில் இந்த சபைகளை அமைப்பதற்கு நாம் முன்வரவேண்டும் என்பதை நான் பகிரங்கமான வேண்டு கோளாக விடுக்கின்றேன்.

தேர்தல் காலத்தில் விவாதங்கள் அல்லது தர்க்கங்கள் நடைபெற்றிருக்கலாம். அதன்போது கருத்துப் பரிமாற்றங்கள் இரு பக்கங்களும் நடைபெற்றிருக்கலாம். ஆனால் தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் சபைகளை அமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எனவே சபைகளை அமைக்கின்ற விடயத்தில் பரஸ்பர விட்டுக்கொடுப்போடு சபைகளை அமைக்க வேண்டும்.

அதிகபட்சமான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு சபைகளை அமைப்பதற்குரிய ஜோக்கியம் இருக்கின்றது என்பது எனது கருத்தாகும். இந்நிலையில் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தவறான நடைமுறைகளை பின்பற்றுகின்றவர்கள் கௌரவ உறுப்பினர்களை பணத்தினால் பரிமாற்றம் செய்கின்ற அந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இருக்கக்கூடாது. அது உங்களுடைய கௌரவ உறுப்பினர்களை மலினப்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகவே அது அமைந்திருக்கும். அவ்வாறான செயற்பாடுகளை உடன் கைவிட வேண்டும் அது ஒரு மோசடியான செயற்பாடாகவே இருக்கும்.

பெரும்பாலும் வடக்கு கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமமான விடயமாகும். ஏனெனில் அவர்களுடைய பெரும்பான்மை என்பது பெரும்பான்மை இனத்தவர்கள் என்ற அடிப்படையில் அது தென்னிலங்கையிலேயே சாத்தியமாகும். என்றாலும் அது வடகிழக்கில் சாத்தியம் இல்லை. ஏனெனில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் சமத்துவம் பேசினாலும் சமத்துவ அடிப்படையில் தீர்வுகளை காண்பதற்கு முன்வரவில்லை என்பதை கடந்த ஆறு மாத காலத்திற்குள் மக்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *