குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்துவதற்கான உயர்மட்ட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஏ.எம்.பி. சி. ரீ. பண்டார , நெஷனல் பேப்பர் கம்பனியின் தலைவர் க உபாலி ரத்நாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று(12) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

கடந்த மாதம் அதிமேதகு ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது மாவட்டத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் குடிநீர் வழங்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்த உயர்மட்ட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

மாவட்டத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சி, வாழைச்சேனை காகித ஆலை மற்றும் கைத்தொழில் பேட்டைகளுக்கான நீர் விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்குத் தேவையான நீர் வளங்களை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

 

அத்துடன், மாதுறு ஓயா மற்றும் வாகனேரி குளங்களிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாகவும் மகாவலி அதிகார சபையினருடன் கலந்துரையாடி நீரை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

மாவட்டத்தின் எதிர்கால குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருத்தமான நீர் ஆதாரங்களை அடையாளம் காணும் நோக்கில், சாத்தியமான பகுதிகள் மற்றும் வளங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.

 

இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரீ.பாரதிதாசன், பொறியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் மாவட்டத்தின் வாகரை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் மாவட்டத்தின் ஏனைய பிரதேச மக்களுக்கான குடி நீர் வழங்கல் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *