வவுனியாவில் சுமார் 1 கோடி ரூபா மதிப்பிடப்பட்ட 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (25) வவுனியா லக்சபானா வீதிக்கு அண்மையில் இடம்பெற்றது.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி காரில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சா, மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது கஞ்சாவை உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பொதி செய்யப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய கார் மற்றும் முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர். எம். யே. எஸ். ரத்னமலல தலைமையில், குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி கே. ஆர். இலங்கசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 1 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

