வாகரையில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபையில் இன்று (14.09.2026) தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வாகரை பிரதேச சபை செயலாளர் சி. புவனதாசன் தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கேணிநகர்–நாவலடியில் நடமாடும் சேவை மற்றும் வருமானம் ஈட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது வியாபார நிலையங்களுக்கான வியாபார உத்தரவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், புதிய வியாபார நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. முகமட் ஹைதர், பிரதேச சபை செயலாளர் சி. புவனதாசன் மற்றும் சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வருடத்திற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று (14.09.2026) முதல் 19.09.2026 வரை நடைபெறவுள்ளன.
இதன்படி, 15.09.2026 பொதுப் பயன்பாட்டு தினமாகவும், 16.09.2026 சுற்றாடல், மரநடுகை மற்றும் சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு தினமாகவும், 17.09.2026 சுகாதாரம் மற்றும் துப்புரவு தினமாகவும், 18.09.2026 இலக்கியம், கல்வி, நூலகம் மற்றும் விளையாட்டு தினமாகவும் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
உள்ளூராட்சி வார செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைத் தலைவர் க. தெய்வேந்திரன் வழங்கியுள்ளார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டிலும் வழிகாட்டலிலும் இவ்வாண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *