நாட்டில் அரசாங்கமும், எதிர்க்கட்சியும், 220 இலட்சம் மக்களும் இருப்பதால், இந்த எல் நினோ – லா நினா தாக்கத்தை அனைவருமே ஒரே மட்டத்திலேயே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆகையினால் இந்த கோரமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தற்சமயம் எல் நினோவின் தாக்கமானது 100% ஆகி காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராசிரியர் எல். எம். அபேவிக்ரம ஆகியோர்களினது இணைத் தலைமையில் இடம்பெற்ற இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றிய கூட்ட அமர்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல் நினோ – லா நினா குறித்து சர்வதேச நிறுவனங்கள் பேசுவதற்கு முன்னரே இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் நான் பேசினேன். தற்சமயம் இதனால் ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.
நாட்டில் மனித வளம், விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலைப் பாதுகாப்பது மிக முக்கியமான தேசியப் பாதுகாப்பு முன்னுரிமைகளாகும். மனித வளத்தையும் வன வளத்தையும் பாதுகாப்பது தேசியப் பாதுகாப்பு சார் முன்னுரிமையாகும்.
இந்த தேசியப் பாதுகாப்பு முன்னுரிமை இலக்குகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பேதங்களின்றி, வெளிப்படைத்தன்மையுடன் தேசிய உரையாடலொன்றை ஆரம்பிப்பதுடன், தேசிய உரையாடல் திட்டமொன்றிற்காக இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் முன்னின்று உழைக்கும்.

