அனுர அரசாங்கம் 20 ஆண்டுகள் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், மக்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாதவர்கள் கட்சிகளை கலைத்துவிட்டு ஓய்வு பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தற்போதைய நிலையில் இலங்கையின் மூவின மக்களும் ஜனநாயக சூழலில் சுதந்திரமாக வாழவும், தொழில் செய்யவும் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ தரப்பை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் புகழ்ந்து பேசியுள்ளதாக இராஜநாதன் பிரபாகரன் குற்றஞ்சாட்டினார்.
அவ்வாறு செயற்படுபவர்கள் பணத்திற்காக செயற்படுவதாக விமர்சித்த அவர், இவ்வாறானவர்களை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்களின் மனதில் இருந்து அகற்றப்படாத வரையில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும், அதற்கு எதிராக செயற்படுவதை விட அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

