உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு மூவர் குழாம்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைவாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைதுசெய்யப்படுவதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வெளியிடப்பட்ட கருத்துகள் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை பரிசீலிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரினால் மூவர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதிவானால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முறைப்பாடு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே, இந்த முறைப்பாட்டை பரிசீலிப்பதற்காக மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் பெயரிடப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் தெரிவித்தார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் விரிவுரையாளர் மஹிந்த பத்திரண ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக முன்னர் தீர்மானித்திருந்தார்.

அதற்கமைய, தொடர்புடைய நபர்களுக்கு எதிராக 2024 ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தை அவமதித்தல் சட்டத்தின் கீழ் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக நீதிவானால் இந்த முறைப்பாடு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசுப் புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது வெளியிட்ட கருத்துகள்மூலம் இந்த நபர்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *