காட்டு யானை தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம்

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருகம்பை – சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (28) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்டு, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருகம்பை மற்றும் சின்ன உள்ளை ஆகிய பகுதிகள் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குவதோடு, தினசரி ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளாகவும் காணப்படுகின்றன.

இத்தகைய மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு மற்றும் சுற்றுலா மண்டலங்களுக்குள் அண்மைக்காலமாகக் காட்டு யானைகளின் வருகையும் நடமாட்டமும் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் பெரும் அச்சநிலை நிலவுகிறது.

எனவே, அருகம்பை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பயணிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடியாகத் தலையிட்டு, குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்தத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *