மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் கணவனின் சகோதரர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து 26 வயதான இளம் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது. மேலும், இளம் பெண்ணின் 3 வயது 4 மாத குழந்தையும் வயல் பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பெண்களுக்கு மயக்க மாத்திரைகள் கலந்த பழச்சாறு வழங்கி அவர்களை கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாகவும், பின்னர் அவர்களை கிணற்றில் வீசியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து வாகனங்கள், மயக்க மருந்துகள், மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய சந்தேகநபர்களான கணவன், மனைவி மற்றும் கணவனின் சகோதரர் ஆகிய மூவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த மூவரும் கடந்த 28ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

