சீரற்ற வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் ‘அர்னாப்’ புயல் காரணமாக இதுவரையில் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இன்று (01) வரையிலான காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்த 137 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 08 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 03 பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன், 08 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

சீரற்ற காலநிலையினால் இரத்தினபுரி மாவட்டமே அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவதாக அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *