இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற புகழ்பெற்ற ICN India – Goa Natural Bodybuilding Championship போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜிஜானந்த், தான் பங்கேற்ற ஆறு பிரிவுகளிலும் வெற்றிகளைப் பெற்று சர்வதேச அரங்கில் சாதனை படைத்துள்ளார்.
இதன்போது, Men’s Classic பிரிவில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், Men’s Bodybuilding பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.
மேலும், இரண்டு பிரிவுகளில் மூன்றாமிடங்களைப் பெற்று இரண்டு வெண்கலப் பதக்கங்களையும், ஏனைய இரண்டு பிரிவுகளில் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக, ICN India Goa Natural Bodybuilding Championship போட்டியின் Men’s Classic பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஜிஜானந்த் நிலைநாட்டியுள்ளார்.
இயற்கை உடற்கட்டழகுப் போட்டியில் சர்வதேச மட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இத்தகைய வெற்றிகளைப் பெற்றுள்ளமை, நாட்டிற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
நீண்டகால அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் சர்வதேச மேடையில் முத்திரை பதித்துள்ள ஜிஜானந்திற்கு பலரும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

