மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுத் தலைவராக கி. திலகநாதன் நியமனம்!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுவின் தவிசாளராக கிருஷ்ணகோபால் திலகநாதன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, விவசாயத்துறையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்படும் இக்குழு, விவசாய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், விவசாயிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிதல், விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னெடுக்கவுள்ளது.

இக்குழுவின் செயலாளராக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் செயற்படுவதுடன், விவசாயம், கால்நடை உற்பத்தி, கமநல அபிவிருத்தி, ஏற்றுமதி விவசாயம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாகச் செயற்படவுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் நியமிக்கப்படும் பிரதேச உறுப்பினர்களும் விசேட கண்காணிப்புப் பொறுப்புடன் இக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் இக்குழுவின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கிருஷ்ணகோபால் திலகநாதன் விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்களின் இணைப்பாளராகவும், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *