பாரிய போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

அம்பாறை – கல்முனைக்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கைவசம் வைக்கப்பட்டிருந்த 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து நேற்று (03) இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

தென்கிழக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் நிறுவனத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கல்முனைக்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சோதனையிடப்பட்டதுடன், சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக 94 சிறிய பொதிகளில் தயார்படுத்தப்பட்டிருந்த போதைப்பொருள் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் போதைப்பொருள் தொகுதியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *