மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தருக்கு கருங்கல் சிலை திறந்து வைப்பு

முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு 15 அடி உயரமான உலகின் முதல் கருங்கற் சிலை இன்று(17) மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு – சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமாகிய பாஸ்கரன் தலைமையில் கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் நிர்மானிக்கப்பட்டுள்ள 15 அடி உயரமான சுவாமிகளின் திருவுருவக் கற்சிலையானது இன்று 17ஆம் திகதி பிற்பகல் 4.30  மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

 

இதன் போது இந்தியாவின் மாமல்ல புரத்தில் சிறந்த சிற்பிகளினால் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு அருகாமையில் வடிவமைக்கப்பட்டுள்ள யாழ் நூல், மகர யாழ் என்பன திறந்து வைக்கப்பட்டதுடன், ஆய்வுக் கட்டுரை புத்தகம், சிறப்பு மலர் வெளியீடு எனும் இரண்டு மலர்கள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

கனடா சுவாமி விபுலானந்தர் கலா மன்றம் உள்ளிட்ட 33 கொடையாளிகளின் நிதிப் பங்களிப்புடன் தனிக் கருங்கல்லினால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கு அதிகமான செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள சுவாமிகளின் திருவுருவச் சிலையினை ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.

 

மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் சிலை நிர்மான குழுத் தலைவருமான தேசபந்து முத்துகுமார் செல்வராசாவினு ஏற்பாட்டில் இடம்பெற்ற

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரன், முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்கள், கிழக்கு மாகாண திணைக்களங்களின் செயலாளர்கள், உயரதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், தவிசாளர்கள், ராமகிருஷ்ண மிசன் பிரதிநிதிகள் மற்றும் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

 

“தமிழ் மறை ஞானி சுவாமி விபுலானந்தரின் தனித்துவம்” எனும் தொனிப்பொருளில் பன்னாட்டு ஆய்வரங்கம் நாளை(18) ஈஸ்ட் லகூன் லோட்டஸ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

 

குறித்த ஆய்வரங்கிற்காக இந்தியாவில் இருந்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் அடங்குவதுடன், பல நாடுகளில் இருந்து பேராசிரியர்கள், கவிஞர்கள் வருகை தரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *