பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய வேலைநிறுத்தம்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிராக, நாளை (25) நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் அடையாளப் பணிப்புறக்கணிப்புடன் கூடிய மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், 2027 வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த போதிலும், அது நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு எதிராக நவம்பர் 18ஆம் திகதி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும், பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *