பேருந்து நிலையத்தில் கார் மோதி சிறுவன் பலி!

கொஹுவளை, எஸ்.டி.எஸ். ஜயசிங்க மாவத்தையில் நேற்று திங்கட்கிழமை மாலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்தினுள் மோதியதில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, நுகேகொடையிலிருந்து கொஹுவளை நோக்கிப் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து முதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும், மற்றுமொரு காரின் பின்புறத்துடனும் மோதியுள்ளது.

இதனையடுத்து, அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தினுள் நின்றுகொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதியதுடன், தொடர்ந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வேன் ஆகியவற்றுடனும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் நுகேகொடைப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய காரைச் செலுத்திய 68 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாணந்துறை, மொரவில பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *