நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படும் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக அந்த சங்கத்தின் நிறைவேற்றுச் சபை மற்றும் அதிகாரிகள் பங்குபற்றும் விசேட கலந்துரையாடலொன்று இன்று காலை நடைபெறவுள்ளது.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்திச் செல்வதில் தாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, இரண்டு எரிபொருள் விநியோக நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கி வந்த கழிவு வீதத்தை நியாயமற்ற முறையில் குறைத்தமை, சட்டவிரோதமான முறையில் வற் (VAT) வரி அறவிடப்படுதல், தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் போதியளவு எரிபொருள் கையிருப்பு வழங்கப்படாமை மற்றும் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கமும் நிர்வாகமும் தலையிடாமை ஆகிய காரணங்களால் இந்த நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், பல்வேறு தொழிற்சங்கங்களால் நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என எரிபொருள் விநியோகஸ்தர்களிடமிருந்து தமது சங்கத்துக்குத் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

