சஜித் கட்சி தொடர்பாக தமிழ் மக்கள் ஆழமாக யோசிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் ஏற்க முடியாத மொட்டுக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் கட்சி இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பாக தமிழ் மக்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். அதேவேளை தெற்கில் இருக்கக் கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற துஸ்பிரயோகம் செய்யும் வகையில் தமிழ்க் கட்சிகள் உடந்தையாக இருக்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவு நரிப்புதோட்டம் பிரதேசத்தில் மே 18 முள்ளிவாய்கால் இன அழிப்பு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி வவுணதீவு பிரதேச அமைப்பாளர் செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விசேடமாக உள்ளுராட்சி சபைகளில் கூட்டாக செயற்பட்டு ஆட்சி அமைப்பதற்காக எங்களுக்கு இதற்கு முதல் எதிரணில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ தமிழ் தேசிய பேரவைக்கோ அழைப்பிதழ் எதுவும் விடுவிக்கப்படவில்லை.

இதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டிலே பேச்சுவார்த்தை சுற்று நடைபெற்றது. ஆனால் இரண்டாம் கட்டமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடாத்த நாங்கள் அது தவறு என கருத்தை தெரிவித்தோம். உண்மையில் இரண்டாவது கட்சியாக தெற்கிலே ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி விரும்பி செய்திருக்கின்றதே தவிர வேறு ஒரு தரப்பு அதில் முந்துவது பொருத்தமில்லை என்பது எங்களது பார்வை.

எனவே தேசிய மக்கள் சக்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அழைத்திருப்பது எங்களுக்கு ஒரு பலத்த மாற்றம். ஏனென்றால் தெற்கிலே ஒரு அறம் இல்லாத அரசியல் நடக்கின்றதா என்றளவுக்கு கேள்வி கேட்க வேண்டியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தபோது  ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி எங்கள் போன்ற கட்சிகள் உறுதியாக அதனை எதிர்த்தோம்.

அந்த வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வைத்திருக்க அவ்வகையான பெரும்பான்மையைக் கொண்ட கட்சிகளுடன் தாங்கள் போய் ஜனாதிபதி பிரதமர் பதவியை ஏற்கமுடியாது என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி அன்று பேசினார்கள்.

அவ்வாறு பேசியதற்கான பிரதான காரணம் அந்தளவுக்கு மொட்டு தரப்பு ஊழல் செய்தது. மக்களால் வெறுக்கப்பட நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை பாயவேண்டும் என பேசியவர்கள் இன்று ஆட்சியமைப்பதற்காக அதே மொட்டுக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்துகிறது என்றால் எங்களை பொறுத்தவரையில் தெற்கில் இந்த மக்கள் இன்னும் விரத்தி நிலைக்கு தள்ளப்படப் போகின்றனர்.

அதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இன்று அவர்களது வாக்கு வங்கியில் அரைவாசி 6 மாதத்தில் குறைந்துள்ளது. எனவே அது தெற்கிலே இருக்கக்கூடிய மக்களது விரக்தி தன்மையை காட்டுகின்றது.

எனவே அதற்கு மாற்றாக வளரக்கூடிய ஐக்கிய மக்கள் சக்தி எந்த விதமான அறவும் இல்லாமல் நடந்து கொள்ளும் வகையில் மொட்டுக்கட்சியை அழைத்து ஆட்சியமைக்க பேசுவது தென் இலங்கையில் இருக்கக்கூடிய மக்களது அரசியல் அபிலாசைகள் மிகப் பெரும் கேள்விக்குறியாக மாறும்.

எனவே தமிழ் கட்சிகள் தெற்கில் இருக்கக்கூடிய சாதாரண மக்களின் விருப்பத்தை மீறுகின்ற வகையிலே அதனை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் நாங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது. எங்களுக்கு ஒரு இனப்பிரச்சனை இருக்கிறது. அது தீர்க்கப்படவேண்டும். அதற்கு தெற்கில் இருக்கின்ற சிங்கள மக்களின் ஆதரவு தேவை. எனவே அவர்களுக்கு தேவைப்படுகின்ற விடயங்களில் அவர்களது நம்பிக்கை இழக்கப்படும் வகையில் அவர்களுடைய விவகாரங்களில் தமிழ் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது.

எனவே ஐக்கிய மக்கள் சக்தி இப்படித்தான் நடந்து கொள்ளப்போகின்றது என்றால் தமிழ் மக்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான தொடர்பாடல் எதிர்காலத்தில் மிகவும்  குறைவாக இருக்கப் போகின்றது. எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் கனிசமான மக்கள் அவருக்கு வாக்களித்தனர் என்பதை தமிழ் மக்கள் மறக்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *