இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான சங்கமான ஸ்லாஸ்காம் ஏற்பாடு செய்த ஸ்லாஸ்காம் இன்யெனியுரி விருதுகள் 2025 தேசிய விருது விழாவில், நெஸ்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெஸ்ட் ஸ்டாட் அப் பிரிவில் முதலிடம் பிடித்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த விழா 2025 ஜூலை 1ஆம் திகதி, கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொழில்நுட்பம், கல்வி, வர்த்தகம், வேலைவாய்ப்பு, மற்றும் புதுமை சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டு தோறும் நடத்தப்படும் இவ்விழா, நாடளாவிய ரீதியில் ஒரு தனித்துவமான நிகழ்வாக அமைந்தது.
நெஸ்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிறுவனத்தின் ஸ்தாபகரான பொறியியலாளர் நாசர் முகமது சஃப்னாஸ் மற்றும் நிர்வாக ஆலோசகரான ஜெரோன் அனஸ் ஆகியோர் இந்த தேசிய விருதை, விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இந்த விருது வழங்கும் விழாவில், 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா, ஸ்லாஸ்காம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிஷான் மெண்டிஸ் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் நிர்வாகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

