நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்று திங்கட்கிழமை (17) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தேசித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ‘ சரியாகவும், தெளிவாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனு பத்திரத்தில் ஒரு பிரதியை மாத்திரம் அத்துடன் இணைக்கப்பட வேண்டிய அனைத்து இணைப்புக்களுடன் உரிய காலப்பகுதியினுள் உரிய மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தல் வேண்டும்.
அத்துடன் பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்) மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தல் கடந்த 10 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி (புதன்கிழமை) நிறைவடையும்.
இந்த பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் 2025.03.24 முதல் 2025.03.27 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது

