நாட்டில் டெங்கு நோய்த் தொற்று மற்றும் பரவல் அபாயம் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் சிரேஷ்ட பதிவாளரும், சமூக மருத்துவருமான அஹ்மட் ஷியாம் எச்சரித்துள்ளார்.
‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஈடிஸ் வகை நுளம்புகள் தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலேயே முட்டையிடுகின்றன. இந்த முட்டைகள் 7 முதல் 10 நாட்களுக்குள் முழுமையான நுளம்புகளாக மாறிவிடுகின்றன.
பிள்ளைகளின் விளையாட்டு உபகரணங்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சொப்பின் பைகள் மற்றும் கூரைகளின் பீலிகளில் தேங்கும் நீர் நீரின் காரணமாக நுளம்புகள் அதிகம் பெருகுகின்றன.
குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம், நீர் சுத்திகரிப்பான்கள் மற்றும் பூச்செடிகளுக்குள் தேங்கும் தண்ணீரின் காரணமாகவும் நுளம்பு அதிகம் பரவுகின்றது.
இந்த நுளம்புகள் பொதுவாக காலை மற்றும் மாலை வேளைகளிலேயே அதிகம் கடிக்கின்றன. இரத்த வகைகளுக்கும் நுளம்பு கடிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
டெங்கு என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். ஆரம்பத்தில் இது சாதாரண காய்ச்சல் போலவே தென்படும்.
இந்த வைரஸ் உடலுக்குள் சென்று குருதிச் சிறுதட்டுகளை அழிக்கும். இதனால் தான் காய்ச்சல் ஏற்பட்டு 3 நாட்களின் பின்னர் இரத்தப் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

