சாய்ந்தமருதில் தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

சாய்ந்தமருதில் தோணா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(28) இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் கோரிக்கைக்கு அமைவாக, சாய்ந்தமருது பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தோணா அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, அதற்கான ஒதுக்கீடு பாராளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் பேரில், அவரது பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 3.2 மில்லியன் பெறுமதியான செயற்றிட்டம் கடந்த மாதம் செய்யப்பட்டிருந்தது.
அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில், தோணா அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பமாக முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, அதற்கான ஆலோசனைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா வழங்கினார்.
இந் நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர், கல்முனை மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர பொறியியலாளர், சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் துறை சார் பொறியியலாளர்கள், உரிய திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிகழ்ச்சித் திட்டமானது விரைவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *