காசா மீதான இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில் அது காசாவுக்கு உதவிகள் செல்வதை தடுத்து சர்வதேச சட்டத்தை மீறுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது.
காசாவுக்கு உதவிகள் செல்வதை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் முடக்கி இருக்கும் சூழலில் ஐ.நா உயர் நீதிமன்றத்தில் நேற்று(28) ஆரம்பமான வழக்கு விசாரணை ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று ஆரம்பமான இந்த வழக்கு விசாரணையை ஆரம்பித்து பலஸ்தீன தரப்பு தனது வாதத்தை முன்வைத்துள்ளது. இதன்போது நெதர்லாந்துக்கான பலஸ்தீன தூதுவர் அம்மார் ஹிஜாஸி வாய்மொழி மூலம் தமது வாதத்தை முன்வைத்தார்.
‘இரண்டு மாதங்களுக்கு மேலாக காசாவுக்கு உணவு, நீர், மருந்து, மருத்துவ விநியோகங்கள் அல்லது எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து வருவதோடு உதவிக்காக விடுத்த பல மனுக்களையும் நிராகரித்து இஸ்ரேல் உச்ச நீதிமன்றமும் இந்தக் கொள்கையை ஆதரிக்கிறது. இது பட்டினி உயிரிழப்புகள் உட்பட மனிதனால் உருவாக்கப்படும் மனிதாபிமான பேரழிவுக்கு வழிவகுக்கிறது’ என்று அவர் நீதிமன்றத்தின் முன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் இஸ்ரேல் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்து எழுத்துமூலம் வாதத்தை முன்வைத்தபோதும் தனது தரப்பு பிரநிதிகளை பங்கேற்கச்செய்யவில்லை என்று அங்குள்ள செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.நா நீதிமன்றத்தின் இந்த விசாரணை தமது நாட்டின் மீதான ‘திட்டமிட்ட அடக்குமுறை மற்றும் சட்டவிரோதமாக்கலின்’ ஓர் அங்கமாக உள்ளது என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோ சார் சாடியுள்ளார்.
இந்த நீதிமன்றம் முழுமையாக அரசியலாக்கப்பட்டிருப்பதாகவும் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உரை ஒன்றில் அவர் குறிப்பிட்டார். ஹேகில் இடம்பெறும் செயற்பாடு வெட்ககரமானது என்றும் கூறினார்.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களுக்கான உதவிகளை இஸ்ரேல் முற்றாக முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஞ்சியுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்கும் வரை காசாவுக்கு பொருட்கள் மற்றும் உதவிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று இஸ்ரேல் கூறிவருகிறது.
இந்நிலையில் ஹேகில் ஐந்து நாட்கள் நீடிக்கவுள்ள விசாரணையில் 15 நீதிபதிகள் குழாத்தின் முன் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா உட்பட 38 நாடுகள் கருத்து வெளியிடவுள்ளன. அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஆபிரிக்க ஒன்றியமும் தமது சமர்ப்பிப்பை முன்வைக்கவுள்ளது.
கடந்த டிசம்பரில் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், பலஸ்தீனர்கள் தொடர்பான இஸ்ரேலின் கடப்பாட்டை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டதோடு இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனையும் கோரப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே ஐ.நா மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொடர்பில் இஸ்ரேலின் கடப்பாட்டை தெளிவுபடுத்த நீதிபதிகளை ஐ.நா நிறுவனம் கோரியுள்ளது. எனினும் சர்வதேச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை செயற்படுத்தும் கடப்பாடு இல்லை என்பதோடு அதனை செயற்படுத்துவதற்கான அதிகாரமும் நீதிமன்றத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.