மலையக முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்; 7 வருட இழுத்தடிப்பின் பின்னர் வெளியான அறிக்கை

கண்டி மாவட்டத்தில் திகன மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து 2018 ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை தாக்குதல் நிகழ்ந்து 7 வருடங்களுக்குப் பின்னர் இந்த செப்டெம்பர் மாதம் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்டது.

 

பல முன்மொழிவுகள் மற்றும் இடைக்கால முன்மொழிவுகளைக் கொண்டுள்ள அவ்வறிக்கையானது பாதிப்புக்குள்ளாகிய முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் தமது தாய்மொழியாகத் தமிழ் மொழியைப் பயன்படுத்துபவர்கள் என்பதையும் பொருட்படுத்தாது ஆங்கில மொழியில் மாத்திரமே வெளியிடப்பட்டது.

 

60 பக்கங்களுக்கும் மேற்பட்ட அறிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு பக்கங்கள் தாக்குதலுக்கு மூல காரணமாக அமைந்த ஹீபிடியேகெதர குமாரசிங்க எனப்படும் 41 வயதான லொறி சாரதியின் மரணம் அது தொடர்பான தகவல்களைக் குறிப்பிடுவதற்காகவே  ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு குமாரசிங்கவின் கொலை ஒரு முக்கிய காரணமாகும், ஆனால் சிங்கள தேசியவாத அமைப்புகள் மற்றும் குண்டர்கள் மத்தியில் அவர்கள் மீது வேரூன்றியிருக்கும் வெறுப்பு அந்த சம்பவத்தால் மாத்திரம் பரவவில்லை.

 

குமாரசிங்கவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் நால்வர், ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவிடம் தாம் குமாரசிங்கவைத் தாக்கியது குறித்த சந்தர்ப்பத்தில் உருவான குழப்பமான நிலைமையினாலேயன்றி இனவாத நோக்கில் அல்லவென பல்லேகலை சிறைச்சாலையில் வைத்து தெரிவித்திருந்தனர். இனவாத நோக்கில் அல்லது குமாரசிங்கவை கொலை செய்யும் நோக்கில் அவரைத் தாக்கவில்லை எனவும் அந்த சந்தேகநபர்கள் கூறியதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “குமாரசிங்கவைத் தாக்கியது அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட உடனடி நிலைமையினாலேயன்றி அவரது இனத்தின் அடிப்படையில் அல்ல என சந்தேகநபர்கள் தெரிவித்தனர். தம்மை கைது செய்யும் வரை அவரது இனம் தொடர்பில் தாம் அறிந்திருக்க வில்லை எனவும், அதேபோன்று அவரைக் கொலை செய்யும் நோக்கில் தாக்கவில்லை எனவும் சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.”

 

ஆயினும் சிங்களவர்கள் அந்த மோதலை இனரீதியான தாக்குதலாகக் கொண்டு  வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

 

தெல்தெனிய பொலிஸாரிடமிருந்து தாக்குதலுக்கான முதல் தோட்டா

 

சந்தேகநபர்கள் நால்வரையும் குற்றவியல் தண்டணை சட்டக்கோவையின் பிரிவுகளின் கீழ் மாத்திரமன்றி குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் (International Covenant on Civil and Political Rights – ICCPR) 3 (1) பிரிவின் கீழ் தெல்தெனிய நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் முன்னிலையப்படுத்தியதன் மூலம்  தெல்தெனிய பொலிசார் இனவாதிகளின் வன்முறைக்கு உந்துதலை வழங்க வழிவகை செய்திருந்தனர்.  இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட ஒரு குடியியல் சச்சரவின் விளைவாக ஒரு தரப்பைச் சேர்ந்த ஆளொருவர் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய படுகாயத்துக்கு உள்ளானதன் காரணமாக மாத்திரமே அச்சம்பவம் தொடர்பில் இனத்தை அடிப்படையாகக்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கைப்படுத்திய நடவடிக்கை நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு நாட்டில் நடைமுறையில் உள்ள பொது குற்றவியல் சட்டமே போதுமானதாகும்.  அந்தக் கொலையுடன் இனமோ மதமோ காரணமாக இருந்ததாக விசாரணைகளின் பின்னர் தெரியவரும் பட்சத்தில் அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கைப்படுத்துவது வேறு, ஆனால் பொலிசார் எந்தவொரு நியாயமான காரணமுமின்றி அந்த மோதலுக்கு இனவாத சாயம் பூசி அறிக்கையிட்டிருந்தனர், எனினும் அது தொடர்பில் நீதிபதி பொலிசாரிடம் விளக்கம் கேட்டிருந்தாரா என்பது குறித்தும் தெளிவில்லாத நிலையே காணப்படுகிறது.

 

ICCPR சட்டத்தின் 3 (1) பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது:

 

“நபர் எவரும் யுத்தத்தைப் பரவலடையச்செய்தல் அல்லது பாகுபாட்டை, விரோதத்தை அல்லது வன்முறையை தூண்டக்கூடிய தேசிய, இனவாத அல்லது மத வெறுப்பினை ஆதரித்துப் பேசுதல் கூடாது.” சட்டத்தின் இந்தப் பிரிவின் கீழ் சந்தேகநபர்கள் நால்வரையும் நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்தும் அளவுக்கு, நீதிமன்றின் முன்னிலையில் குறித்த மோதல் மதத்தின் அல்லது இனத்தின் அடிப்படையில் ஏற்பட்டது எனக் கூறும் அளவுக்கு பொலிசார் வசம் இருந்த சான்றுகள் எவை என ஆணைக்குழு பொலிசாரிடம் வினவியதாக அறிக்கையில் எதுவும் வெளிப்படுத்தப்பட வில்லை. சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் வரக்கூடிய தவறொன்றை  முஸ்லிம்களாக இருப்பதன் காரணமாக மட்டுமே இனத்தை பெரிதுபடுத்தி “யுத்தம் மற்றும் மதரீதியான, இனரீதியான வெறுப்பை பரப்புதல்” என்ற குற்றச்சாட்டின் கீழ்  நீதிமன்றின் முன்னால் முன்னிலைப்படுத்துவது கைமீறிய நிலையாக இருப்பதோடு இன்னொரு புறத்தில் இனவாத விசமிகளின் வன்முறை நடவடிக்கைகளுக்கு தொடக்கத்திலேயே ‘பொலிசார் துப்பாக்கியை வழங்கும்’ நிலைமையாகவும் அமைந்தது. பொலிசாரின் குற்றச்சாட்டு நீதிமன்றின் முன்னிலையில் நிரூபிக்கப்பட்டதா என்பதை தேடியறிவதற்கு ஆணைக்குழுவுக்கு இன்னும் ஏழு ஆண்டுகள் காலம் தேவைப்படுமா என்பதை அதில் உள்ள அறிஞர்கள் மட்டுமே அறிவர்.

 

ஆரம்ப மோதல் மற்றும் அதன் பின்னர் இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு மற்றும் தன்மை என்பவற்றை வேறுபடுத்துவதில் ஆணைக்குழு தோல்வியடைந்துள்ளது. குமாரசிங்க தொடர்பில் கதைப்பதைப் போன்றே அவரது மரணத்திற்கு காரணமான சமூகச் சூழலையும் கருத்திற் கொள்ளல் முக்கியமாயினும், ஆணைக் குழுவின் பிரதான கடமையாக இருந்திருக்க வேண்டியது நாட்டில் உருவான இனத் துவேசமிக்க தாக்குதல்களுக்கு பொறுப்பான சாராரைப் போன்றே காரணங்களையும் ஆராய்ந்து அது சம்பந்தமாக ஆழமான மற்றும் தெளிவான ஆராய்ச்சி முடிவொன்றை சமர்ப்பிப்பதேயாகும்.

 

மனித உரிமைகள் ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது ஆய்வின் முடிவொன்றாக சமர்ப்பிக்கப்பட்டதா, அவ்வாறல்லாது சாதாரண மட்டத்திலான தகவல் சமர்ப்பிக்கும் ஒரு அறிக்கையா என்னும்  கேள்வி எம்முன் எழுகிறது. தாக்குதலின் பின் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய ஆய்வுக்குழு முன்னிலையில் தோன்றிய பாதிப்புக்குள்ளான முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்கள் ஆகிய அனைவரதும் அறிக்கைகள் கணிசமான அளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அறிக்கைக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட தகவல் மூலங்கள் மற்றும் அவற்றை சமர்ப்பிக்கும் தன்மை என்பவற்றின் அடிப்படையில், சாதாரணமாகப் பார்க்கும்போது, அரசுக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்கும்போதும், முடிவில் அது தொடர்பான தனது கருத்தை சமர்ப்பிக்கும்போதும் ஆணைக்குழுவானது “மிகவும் எச்சரிக்கையுடன்” இருந்திருக்கும் விதம் தெரிகிறது.

 

மாநில குற்றவியல் தன்மையை புறக்கணித்தல்

 

அரச குற்றங்கள் மற்றும் அரசின் தலையீட்டின் பேரில் ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெறும் இனவாதக் காடையர்ச் செயல்கள் குறித்து அரச கட்டமைப்பை நோக்கி விரல் நீட்டாமலேயே வெறும் ஜனரஞ்சக மட்டத்திலான சில கருத்துக்களை மாத்திரமே ஆணைக்குழு சமர்ப்பிக்கிறது. நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு, மத ரீதியான முரண்பாடுகள் பற்றிய எண்ணக்கருக்கள் போன்றே  சமாதானம் மற்றும் மோதல் தீர்வு பற்றிய தலைப்புகள் என்பன அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டத்தில் உள்ள ஜனரஞ்சகமான பிரகடனங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் ஆகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகாரத்துக்கு வரும் அரசுகள் மூலம் இவ்வாறான விடயங்கள் முன்னிலைக்கு எடுத்து விடப்படுகின்றன. அதன் காரணமாகவே, அரசின் பெயரும் தொடர்புபடக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட இனவாதத் தாக்குதலின்போது, தாக்குதல்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவு மற்றும் தூண்டுதல் அளித்த நபர்கள் குறித்த நேரடியான பகிரங்கப்படுத்தலே தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற உத்தியோகபூர்வ அமைப்பின் கடமை மற்றும் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.

 

கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு அரச அனுசரணை கிடைக்கப் பெற்றமைக்கான  நம்பகமான சான்றுகள் இருந்தபோதிலும், ஆணைக்குழுவானது தனது அறிக்கையில் எந்தவொரு இடத்திலும், அரச நிறுவனக் கட்டமைப்பு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. அரசு என்பது வெறுமனே அரசியல் ரீதியான அதிகாரத்தை மட்டும் குறிப்பதல்ல. அதில் பொலிஸ், பாதுகாப்புப் படைகள், அரச நிர்வாகப் பொறிமுறை, சட்டம் மற்றும் அதை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், தனிநபர்கள் போன்ற பாரியதொரு பரப்பு உள்ளடங்கும்.

குறிப்பாக தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களாகக் கூறப்படும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பெயரிடவோ அல்லது அவர்களுக்கு எதிராகத் தகவல் மற்றும் சாட்சியங்களை சமர்ப்பிக்கவோ ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தாக்குதலுக்கு இலக்கான  பாதிக்கப்பட்ட முஸ்லிம்களால் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு எதிராக ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான சாட்சியங்களும் தகவல்களும் சமர்ப்பிக்கப் பட்ட போதிலும், ஆணைக்குழுவின் உரிய விசாரணை குழுவோ அல்லது அதன் அதிகாரிகளோ  அவற்றைக் கவனத்தில் கொள்ளாமைக்கான காரணம் என்ன என்பது கேள்விக்குரியது.

 

தாக்குதலுடன் தொடர்புடையவராக ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டு, அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரேயொரு நபர் மஹசோன் பலகாய என்ற கடும்போக்கு இனவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மட்டுமேயாவார். அதுவும் குற்றச்சாட்டாக அன்றி ஒரு சாதாரண மட்டத்திலான ஒரு விளக்கமளித்தலாகும்.

ஆணைக்கு ழுவானது அதன் விசாரணை அறிக்கையின்  ஆரம்ப அத்தியாயம் ஒன்றில் இவ்வாறு எழுதியுள்ளது.

“1996 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவானது இந்நாட்டுப் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், அடிப்படை உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரச நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென்ற போதிலும், தனிப்பட்ட தரப்பினரான குற்றவாளிகளுக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. ஆயினும், வன்முறையின் தன்மை மற்றும் அதன் விளைவுகள் என்பவற்றின் அடிப்படையில், குடிமக்களின் உரிமைகளின் கீழான மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் போது, எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.”

 

ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அதிகாரத் தரப்பினரின் உதவி இன்றி இத்தகையதொரு அழிவை ஏற்படுத்த முடியுமா என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், ஆணைக்குழுவே குறிப்பிடும் அரச தலையீடானது அதன் மூலம் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை.

 

ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, முற்றாக சேதப்படுத்தப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 290 ஆகும். அவற்றுள் 243 வீடுகள் தாக்குதலுக்குட்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன், 47 தீ வைப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தீக்கிரையாக்கப்பட்ட 47 வீடுகளில் 17 வீடுகள் பல்லேகல பிரதேசத்தில் அமைந்திருந்ததுடன் அவை முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வீடுகளாகும். ஒட்டுமொத்தமாகப் நோக்கும் போது, அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலிருந்தே அழிக்கப்பட்டிருக்கின்றன. அவை 106 ஆகும். தாக்குதல்களால் சேதப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 94 ஆக இருப்பதுடன், அவற்றிலும் அதிக எண்ணிக்கையானவை பல்லேகல பிரதேசத்தில் இருந்தே பதிவாகியுள்ளன. அந்த எண்ணிக்கை 33 ஆகும். 96 தீ வைப்புச் சம்பவங்களும் 121 தாக்குதல்களும் உள்ளடங்கலாக 220 வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. அவற்றிலும், அதிக எண்ணிக்கையிலானவை தெல்தெனிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன் அவை 35 தீ வைப்புச் சம்பவங்களும் 50 தாக்குதல் மூலமான சேதப்படுத்தல்களும் எனப் பதிவாகியுள்ளன. 20 இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களும் ஒரு பௌத்த விகாரையும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், 6 இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை இனவாத காடையர்கள் தீக்கிரையாக்கி அழித்துள்ளனர். 15 ஜும்மா மஸ்ஜித்கள் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளமையானது மத வெறுப்பு  எந்தளவுக்கு காணப்பட்டது என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. எனினும் அந்தக் காலப்பகுதியில் பதிவான மிகவும் கொடூரமான குற்றச் செயல்கள் குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் எவ்விதக் குறிப்பும் காணப்படவில்லை.

 

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹல எண்டேருதென்ன கிராமத்தில் ஒரே சமயத்தில் 56 வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக, அவ்வீடுகளில் வசித்த நூற்றுக்கும் அதிகமானோர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அருகிலிருந்த காட்டுப் பிரதேசத்துக்குள் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு காட்டில் தஞ்சம் புகுந்தவர்களில் நோயாளர்கள், குழந்தைகள், முதியவர்கள் மாத்திரமன்றி பிரசவத்தை அண்மித்திருந்த கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்கியிருந்தனர். பின்னர் காடையர்கள் அந்த வீடுகளில் பலவற்றை கொள்ளையடித்துவிட்டு, வீடுகளை தீக்கிரையாக்கினர். தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே, குடியிருப்பாளர்கள் உடனடியாக முஸ்லிம் சமயத்தலைவர்கள் ஊடாக பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்திருந்த போதிலும், அவர்கள் எவரும் அவை குறித்து கவனம் செலுத்தியிருக்கவில்லை.

 

இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (JDS) இணையதளம் உட்பட அனேகமான இணையதளங்களில் வெளியிடப்பட்டன. எனினும் ஆணைக்குழுவின் அறிக்கையில் அவ்வாறான பாரதூரமான நிகழ்வுகள் குறித்த எந்தவொரு குறிப்பும் காணக்கிடைக்கவில்லை.

 

பொலிசாரும் இராணுவமும் கண்டுகொள்ளாத குற்றங்கள்

 

அனைத்து குற்றங்களும் தாக்குதல்களும் குமாரசிங்கவின் மரணம் பதிவான நாள் மற்றும் அதற்கு மறுநாள் மட்டும் நிகழவில்லை என்பதுடன்  அவை அவருடைய கிராமப் பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கவில்லை. இவை அனைத்தையும் விட மிக முக்கியமான விடயம் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் ஆகியோர் அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் இருந்தபோதே அனேகமான தாக்குதல்கள் நிகழ்ந்தன என்பதுடன் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவையும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவை நிகழ்ந்தேறின.

 

அது தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் பின்வருமாறு:

மார்ச் 03 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கண்டி மாவட்டத்தின் 16 பொலிஸ் பிரிவுகளிலும், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் (CTID) கைது செய்யப்பட்ட மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை 230. அவர்களில் 61 பேர் குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாய சட்டத்தின் (ICCPR) கீழும், 55 பேர் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் கீழும் கைது செய்யப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 பேரும், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 58 பேரும் கைது செய்யப்பட்ட இந்த மொத்த எண்ணிக்கையில் உள்ளடங்குவர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு எதிராகத் தெளிவான சாட்சியங்களுடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. ஆயினும் நாம் அறிந்தவரையில், அவர்களில் கணிசமான எண்ணிக்கையானோர் பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல்கள் தொடர்பில் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிலர் தாம் நிரபராதிகள் என்று ஆணைக்குழுவிடம் தெரிவித்தனர் எனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலங்கையில் ஏனைய இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்வதிலும், அதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் உள்ள அலட்சியப் போக்கை  இது மீண்டும் ஒருமுறை தெளிவாகப் படம்பிடித்துக் காண்பிக்கிறது.

இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல்களானவை சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள குடிமக்களின் தலையீட்டினால் மாத்திரமே நிகழக்கூடிய தரத்திலானவையல்ல. கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற  வன்முறைகளின்  பின்னணியில் பௌத்த பிக்குகள், அரசியல்வாதிகள், பாதுகாப்புப் பிரிவினர் அத்துடன் அவர்களின் ஆதரவைப் பெற்ற உள்ளூர் காடையர்கள் ஆகியோரும் இருந்தார்கள் என்பது இரகசியம் அல்ல.

இறுதியில், இது உயர்மட்ட  அரசியல் அதிகாரத்தின் அல்லது ஆளும் அரசாங்கத்தின் ஆணிவேர் வரை பரவிச் செல்வதாகும். கண்டி வாழ் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் நாம் அதை நன்கு அறிந்துகொண்டோம்.

 

நிலைமை மோசமான பின்னர் அல்லது அனைத்தும் முடிவடைந்த பின்னர் அரச தரப்பின் உயர் மட்டத்தினர் அதைத் தாமே கட்டுப்படுத்தியதாகக் காட்டுவதற்காகவே, பாதிப்புக்குள்ளானவர்களைச் சந்திப்பதற்கும், சமூகத் தலைவர்களுடன் சுமுகமான சந்திப்புகளை நிகழ்த்துவதற்கும், கவலை தெரிவிப்பதற்கும் வருகை தருகின்றனர். கண்டி தீப்பற்றி எரிந்து முடிந்த பின்னர், அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும், இராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் முணசிங்கவும் வருகை தந்து ஊடகங்களுக்கு முகத்தை நுழைத்தமை, இதைத் தவிர வேறு ஒரு அர்த்தத்திலுமாகவும் இருக்க முடியாது.

 

மனித உரிமைகள் ஆணைக்குழுவானது தனது விசாரணையில் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டியது பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப் படை (STF) மற்றும் இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பிலேயேயாகும். மாறாக, தெல்தெனிய, கட்டுக்கஸ்தோட்டை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு கம்புகள் மற்றும் தடிகள் சகிதம் வந்த சாதாரண மட்டத்திலான குண்டர்கள் தொடர்பில் அல்ல. இங்கு அவர்கள்  இரண்டாம் நிலை செயற்பாட்டாளர்களே.

 

தகவல்கள் மறைக்கப்பட்ட விசாரண

 

தாக்குதலுக்கு இலக்கான, குறிப்பாகப் பாதுகாப்புப் பிரிவின் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் சட்டவிரோத சிறைவைப்புக்கு இலக்கான முஸ்லிம் சமூகத்தினர், ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவிடம் வழங்கிய வாய்மொழி மூலமான ஆதாரங்கள், எழுத்துமூலமான ஆதாரங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் எவையேனும் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டனவா என்ற பாரதூரமான சந்தேகம் எம் முன்னால் தோன்றுகிறது.

 

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சாட்சியங்கள் மற்றும் தகவல்கள் தங்களுக்கு உரிய விதத்தில் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி, அந்தக் குற்றத்தை சாட்சியங்களும்  முறைப்பாட்டாளர்களுமான பாதிக்கப்பட்டவர்கள் மீதே சுமத்த மனித உரிமைகள் ஆணைக்குழு முயற்சி செய்தது போலத் தோற்றமளிக்கிறது.

 

அச்சுறுத்தல்கள் உள்ளடங்கலாக, விசாரணைக் குழுவுக்குக் கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட பாரதூரமான முறைப்பாடுகளில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையானவற்றை மாத்திரமே ஆணைக்குழு தனது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் சம்பவங்களாக அறிக்கையில் உள்ளடக்க முடியாது என்பது உண்மையே. எனினும், மிகப் பிரதானமானது யாதெனில், அனைத்து முறைப்பாடுகளையும் சம்பவங்களாக அறிக்கையில் உள்ளடக்குவதை மாத்திரம் கவனத்தில்கொள்ளாது  தவிர்க்கமுடியாத சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் வகையில் விடயங்களை அறிக்கைப்படுத்தலாகும்.

 

குறிப்பாக, அம் முறைப்பாட்டாளர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர் யார்? அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் யாவை? அந்த முறைப்பாட்டாளர்களும், பாதிக்கப்பட்டவர்களும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது எவ்வாறு? போன்றவற்றை விரிவாக எடுத்துக்காட்டுவதன் மூலம், அரசினதும் மற்றும் இராணுவத்தினதும் குற்றமிழைத்தல்கள் தொடர்பிலான தகவல்களை சமூகமயப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கும். ஏனெனில், இந்த விசாரணையை மேற்கொண்டதும், இறுதியில்  அறிக்கையொன்றைச் சமர்ப்பித்ததும் நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவேயன்றி வேறு ஏதேனும் ஒரு குழுவோ அல்லது அரச சார்பற்ற நிறுவனமோ அல்ல.

 

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வரையறைகள் இருக்க முடியாது. அவர்களது கட்டளையுரிமை (Mandate) மூலமாக அதற்கு கட்டளையிடும் அதிகாரம் வழங்கப்படவில்லையென்ற போதும், அதை அலட்சியப்படுத்த முடியாத ஒரு அரை நீதித்துறை அதிகாரம்  அதனிடம் உள்ளது. இது முறைப்பாடுகளை விசாரணை செய்யும் அதிகாரத்தில் தொடங்கி நாட்டின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் சம்பந்தமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல் வரை நீண்டு செல்கிறது.

 

பாதிப்புக்குள்ளான பெரும்பாலான முறைப்பாட்டாளர்களும் சாட்சியங்களும்  கையில் கம்புத் தடிகளை கொண்டிருந்த  சிவில் காடையர்களுக்கு எதிராக மட்டுமன்றி, அரச அதிகாரம் கொண்ட விஷேட அதிரடிப் படையினரால் இழைக்கப்பட்ட அநியாயங்கள் குறித்தும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். அவை குற்றவியல் அச்சுறுத்தல் மற்றும் பலவந்தப்படுத்தல், சித்திரவதைக்கு உட்படுத்துதல் என்பவற்றைப் போன்றே பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் தன்னிச்சையாகக் கைது செய்தல் போன்ற கடுமையான சட்டவிரோதச் செயல்களாகும். தாக்குதல்கள் காரணமாக, பாதிப்புக்குள்ளானவர்கள் சிலருக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைமையும் கூட  ஏற்பட்டது. திகன இனவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை தாமதமாவதைக் கேள்விக்குள்ளாக்கி 2024ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் தோன்றிய பாதிப்புக்குள்ளான  ஒரு முஸ்லிம் நபரின் இரண்டு கால்களும் முறிந்திருந்தன.

 

முறைப்பாட்டாளர் ஒருவரின் கருத்தக்கு அமைய, அவர் மேலும் 40 முதல் 50 வரையான பக்தர்களுடன் மாலைத் தொழுகையை முடித்து விட்டு 2018 மார்ச் 04 அன்று ஹிஜ்ராபுர பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்தபோது, விஷேட அதிரடிப் படையின் (STF) ஜீப் வண்டியில் வந்த முகமூடி அணிந்த ஒரு குழுவினர், அவர் உள்ளிட்ட பலரையும் துப்பாக்கிகள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

 

சாட்சியங்கள்

 

” STF ஜீப் வண்டி ஒன்று பள்ளிவாசலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இருந்தவர்கள் முகங்களை மூடி, கைகளில் தடிகள் வைத்திருந்தனர். அவர்கள் விசேட அதிரடிப் படையைச் (STF) ஐச் சேர்ந்தவர்கள்தான் என எவ்வாறு அடையாளம் கண்டீர்கள் என வினவப்பட்டபோது, பதிலளித்த முறைப்பாட்டாளர், அவர்கள் சீருடை அணிந்திருந்ததுடன் STF இலட்சினை (Logo) பொறிக்கப்பட்ட தொப்பிகளை அணிந்திருந்தனர்.” என அவர் கூறினார்.”முதல் முறைப்பாட்டாளரின் கூற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்த மற்றொருவரும், STF படையினர் பள்ளிவாசலில் இருந்த தாம் சார்ந்த குழுவினரைத் தாக்கி, பள்ளிவாசலில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்துக்கு அப்பால் கொண்டு சென்றதாக முறைப்பாட்டில்  குறிப்பிட்டுள்ளார்.

 

மூன்றாவது முறைப்பாட்டாளரின் கருத்துகளுக்கு அமைய, அவரும் மற்றுமொருவரும் வீட்டில் இருந்தபோது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த விஷேட அதிரடிப் படையினர் குழுவொன்று அவர்களைத் தடிகளால் தாக்கி, அருகில் இருந்த  கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு கொண்டு சென்றிருக்கிறது. அந்த முறைப்பாட்டாளரின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக அவருடன் வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

“அச்சமயத்தில், அவரது தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. காயத்தைக் காட்டியதன் பின்னர், STF அதிகாரிகள் அவருக்கு ஐஸ் (பனிக்கட்டி) வழங்கியுள்ளனர். வாக்குமூலம் பெறுவதற்காக அவர்கள் இருவரையும் மாலை 6 மணியளவில், தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பிறகு, மூன்றாவது முறைப்பாட்டாளரை தெல்தெனிய வைத்தியாலைக்கு அனுப்பியுள்ளனர். அம்முறைப்பாட்டாளர் தனது தலையில் ஏற்பட்ட காயத்தைக் காட்டக்கூடியதான புகைப்படங்களை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார்.” அவருடன் வீட்டில் இருந்த மற்ற நபரும் அவரது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், ஆணைக்குழுவிடம் சாட்சியம் வழங்கியிருந்தார்.

 

“தாக்குதல்களால் அச்சமடைந்திருந்த தனது பிள்ளை வீட்டில் இருந்ததால் கதவை மூடிக்கொண்டு இருந்ததாகவும், STF படையினர் சில போத்தல்களை ஒரு பையில் போட்டு திகன பள்ளிவாசல் வரை அப்பையைக் கொண்டு செல்லுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் கூறினார். விசேட அதிரடிப் படையினருக்கு எதிராக 2018 மார்ச் 13 இல் தான் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் முறைப்பாட்டாளர் குறிப்பிடுகிறார்.

 

பெட்ரோல் குண்டுகளை தன் வசம் வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் இந்த முறைப்பாட்டாளருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

“பெட்ரோல் குண்டுகளை தம்வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அந்தக் குற்றச்சாட்டுகள் போலியானவை மற்றும் பகையுணர்வுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டு தெல்தெனிய நீதிமன்றம் அவர்கள் இருவரையும் விடுதலை செய்தது. எனினும், ஏழு ஆண்டுகளுக்குப் பின்னராவது வெளியிடப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் அத்தகைய தகவல்கள் எதுவும் குறிப்பிடப்பட்டமையை காணக்கிடைக்கவில்லை..

கம்பளை STF முகாமின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. ரணசிங்கவின் சாட்சியத்தின் பிரகாரம், ஹிஜ்ராபுர பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம் மக்களை “அடக்க” அவர் ஒரு குழுவினரை அங்கு அனுப்பியுள்ளார். திகனையில் இருந்து வரும் சிங்களவர்களைத் தாக்குவதற்காக முஸ்லிம்கள் ஹிஜ்ராபுர பள்ளிவாசலில் ஒன்றுகூடுவதாக  கிராம அலுவலர் ஒருவர் ‘தொலைபேசியில்’ வழங்கிய தகவலின் அடிப்படையில் இது நடந்தது. தங்கள் மீது  தாக்குதல் நிகழ்த்தியது அவ்வாறு வந்த படையினர்தான் என்று காயமடைந்தவர்கள் கூறியபோது, அந்த கட்டளை அதிகாரி அதை மறுத்து, ஆணைக்குழுவில் படையினர் தரப்பில் முன்னிலையாகி  பதில் வழங்கியுள்ளார். ஆணைக்குழுவானது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கூற்றை மேற்கோள் காட்டியிருந்த போதும் பாதிப்புக்குள்ளான முறைப்பாட்டாளர்களால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டதா என்பது தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

 

அந்நாட்களிலேயே JDS இணையதளத்தில்  வெளியிடப்பட்டிருந்த, விசேட அதிரடிப் படை வீரர்கள் பள்ளிவாசல் அருகில் வைத்து முஸ்லிம்களைத் தாக்குவதைக் காண்பிக்கும் காணொளி கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு ஊடகங்களில்  பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளன. முறைப்பாட்டாளர்களால் அந்தக் காணொளியும் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டிருந்த போதும், அதுகுறித்து மேலதிக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. குறித்த முறைப்பாட்டாளர்களுக்கு, STF படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கே சிங்கள இன வைத்தியர்கள் நடந்துகொண்ட விதம் குறித்தும், ஆணைக்குழுவின் அறிக்கையில் “வீரியம் குறைக்கப்பட்டே”’ குறிப்பிடப்பட்டுள்ளது. “உங்களையெல்லாம் வைத்தியசாலையில் அல்ல, கூட்டுக்குள் (சிறையில்) தான் வைத்திருக்க வேண்டும்” என்று வைத்தியசாலையில் முதற்கட்ட சிகிச்சையளித்த மருத்துவர் முறைப்பாட்டாளரிடம் சிங்களத்தில் கூறியதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆனால், அந்த வைத்தியர்கள் சம்பந்தமாக ஆணைக்குழு எடுத்த நடவடிக்கை குறித்து எந்தவிதமானதொரு குறிப்பும் இல்லை. அந்த வைத்தியர்கள் வேண்டுமென்றே சட்டத்தையும், வைத்திய நெறிமுறைகளையும் மீறியுள்ளனர். இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் விரோதத்துடன் நோயாளிகளை இழிவுபடுத்தியுள்ளனர். குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம் (ICCPR) இத்தகைய நபர்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட வேண்டாமா? வைத்தியர்கள் இனத்தின் அடிப்படையில்  செயற்படுவார்களாயின் அது தொழில்முறை ரீதியிலான துஷ்பிரயோகம்  ஆகும். ஆணைக்குழுவால் அது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கோ அல்லது இலங்கை வைத்திய சபைக்கோ அறியத்தரப்பட்டதா? குறைந்தபட்சம் அந்த வைத்தியர்கள் விசாரணைக் குழுவின் முன் அழைக்கப்பட்டார்களா?

 

இவை அனைத்துக்கும் இறுதியில், ஆணைக்குழுவால் முறைப்பாட்டாளர்களிடமிருந்து கோரப்பட்ட எழுத்து மூல மற்றும் மின்னணுச் சான்றுகள் முறையாகத் தங்களுக்குக் கிடைக்கவில்லை என ஆணைக்குழு கூறுகிறது. இதன் மூலம் எதைக் காண்பிக்க முயற்சிக்கிறது? எம்மால் வெளிப்படுத்த முயற்சிக்கப்படுவதும் அதுதான். அதாவது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பற்ற மற்றும் நீர்த்துப்போன கொள்கையின் நீளம், அகலத்தைத்தான்.

 

முதலாவதாக, ஆணைக்குழுவானது அரசியலமைப்பு ரீதியாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த ஒரு  புரிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஏதேனுமொரு விசாரணையுடன் அல்லது முறைப்பாட்டுடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனத்திடமும் அல்லது நபரிடம் இருந்தும், எழுத்து மூலமான, வாய்மொழி, மின்னணு அல்லது வேறு ஏதேனும் சாட்சியங்களை நேரடியாக தம்மிடம் அழைக்கும் அதிகாரமும் உரிமையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உண்டு. அதேபோல், எந்தவொரு தராதரத்திலுமுள்ள நபரிடமும் கேள்வி கேட்கும் அதிகாரமும் ஆணைக்குழுவிடம் உள்ளது. பாதிப்புக்குள்ளான முறைப்பாட்டாளர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஆணைக்குழுவுக்கு  உள்ளது. அப்படியானால், பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட இம் முறைப்பாட்டாளர்கள் கூறும் விடயங்களை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எழுத்துமூல ஆதாரங்களான வைத்திய அறிக்கைகள், நீதிமன்ற மற்றும் பொலிஸ் முறைப்பாட்டுப் பதிவுகளை அவர்களிடமிருந்தே கோருவதற்கும், அவை கிடைக்காதபோது, அந்தக் குறை அல்லது தவறை முறைப்பாட்டாளர்கள் மீதே சுமத்துவதற்கும் காரணம் என்ன?

இலங்கையில், ஒரு நோயாளி, குறிப்பாக சட்ட வைத்திய பரிசோதனைக்கு  உட்படுத்தப்படும் ஒருவரின் அறிக்கைகள் நேரடியாக அந்த நோயாளியின் கைகளுக்குக் கிடைப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறைந்த பட்சம், விசாரணையை மேற்கொள்ளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கூட சட்ட வைத்திய அறிக்கைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கையில் இல்லை. இது சிக்கலானதும் காலதாமதமாகக்கூடியதுமான ஒரு செயல்பாடாகும். சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றத்திற்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவுக்கு இது தெரியாமல் இருக்கும் எனக் கூற முடியாது. ஏனெனில், விசாரணைக்குழுவில் உள்ள பெரும்பாலானோர் சட்டம் குறித்து ஆழ்ந்த அறிவைக் கொண்டவர்களாவர். அவ்வாறிருக்க, பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களுக்கு வைத்திய அறிக்கையைக் கோருமாறு கூறுவது, மருந்து வழங்காமல் “கூட்டில் அடைக்குமாறு” பரிந்துரைத்த  சிங்கள மருத்துவர்களிடமேவா?

 

பாதுகாப்புத் தரப்பிற்கு சார்பாக நடந்துகொள்கிறதா?

 

சந்தேகநபர்களான இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பிலும் பின்பற்றப்பட்டுள்ள கொள்கையானது மிகவும் தெளிவாகக் காண்பிக்கப்படுகிறது. ஆணைக்குழுவுக்கு உண்மையாகவே ஒரு நாட்டம் இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்களது குற்றச்சாட்டுக்கு  உள்ளாகும் இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் அவர்களுக்குப் பொறுப்பாக இருந்த முகாமின் பிரதான அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. தாக்குதல்களை தடுப்பதற்காகவோ, அல்லது வேறெந்த நோக்கத்துக்காகவோ கண்டிக்கு அழைக்கப்பட்டிருந்த பொலிஸ் இராணுவப் படையணி எது? அவற்றில் குறித்த காலப்பகுதியில் கடமை புரிந்த இராணுவ சிப்பாய்கள் யாவர், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்த அதிகாரி யார் முதலிய தகவல்களை உத்தியோகபூர்வமாக அணிந்துகொள்வதற்கான இயலுமை ஆணைக்குழுவுக்கு உள்ளது.

 

பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட படையணியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், இடர்கள் மற்றுமன்றி ஒழுங்கமைக்கப்பட்ட இனவாத காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் தடுப்பதற்கு பாதுகாப்புப பிரவுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பாரதூரமான குற்றச்சாட்டுகள் ஏராளமாக உள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்த அனைத்து தரப்பினரும், அரசில் அமைச்சுப்பதவி வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் கூட பொதுவெளியில் முன்வைத்தனர். எனினும் பொறுப்பற்ற ஒரு நபரையோ அல்லது ஒரு தரப்பினரையோ நேரடியாக பெயர் குறிப்பிட்டுச் சொல்லாதிருப்பதற்கு ஆணைக்குழு “கவனமாக இருந்ததற்கு” காரணம் என்ன?

 

ஏழு ஆண்டுகளாக ஆணைக்குழுவின் அறிக்கை தாமதமானபோது தொடர்ச்சியாக அது தொடர்பில் சந்தேகம் எழுப்பிய பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தாக்குதல்களுக்கு சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி பாதுகாப்புத் துறையும் தொடர்புபட்டிருந்ததனாலேயே அந்த நிலைமையை வெளிப்படுத்த முடியாததால் ஆணைக்குழு அறிக்கை தாமதப்படுத்தப்படுவதாகக் கூறியிருந்தனர். ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு அதை கருத்திற்கொள்ளாதிருக்க முடியாமல் போயுள்ள அளவு அறிக்கையிலேயே புலப்படுகிறது.

 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவின் முன்னிலையில் நீண்ட வாக்குமூலமொன்றை வழங்கியுள்ள அன்றைய மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ். எம். விக்ரமசிங்கவின் கூற்றுக்கு அமைய, முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல் நிகழக்கூடிய நிலைமை ஏலவே அறிக்கைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் பிரதேசத்துக்கு வந்த வன்முறைக் கும்பலின் எண்ணிக்கை, மற்றும் தாக்குதல் பரவிய நிலத்தோற்ற அமைப்பு காரணமாக நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களின் ஆளணியினர் போதிய அளவில் இருக்கவில்லை எனக்கூறியுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையகத்தினால் அனுப்பப்பட்ட கலகத்தடுப்பு பிரிவின் இரு குழுக்களாலும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.  எனினும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை நெறிப்படுத்தியவர் என ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு நபரான மஹசோன் பலகாய எனும் அமைப்பின் முக்கியஸ்தரான அமித் வீரசிங்கவின் மனைவி மற்றும் அம்பிடியே சுமனரதன தேரர் தாக்குதலின் பின்னணியில் அந்த பொலிஸ் அதிகாரி இருந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். அவர்களது கூற்றுகளுக்கு அமைய முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்கவே அமித் வீரசிங்கவை அதற்காக பயன்படுத்தியுள்ளார்.  எனினும் ஆணைக்குழுவுக்கு அதுபற்றி எந்த விதமான அக்கறையும் இல்லை. அந்த அளவு குற்றச்சாட்டு உள்ள ஒருவர் பிற்காலத்தில் மக்கள் குறைகேள் அதிகாரியாக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்படும்போது மனித உரிமைகள் ஆணைக்குழு எவ்வாறான தலையீட்டை மேற்கொண்டது என்பது வியப்புக்குரியதாகும். குறைந்தபட்சம் அறிக்கையிலாவது ஆணைக்குழு அது தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்திருக்கலாம்.

 

அதேபோன்று கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது  அமித் வீரசிங்க அவரது வழமையான இனவாத இயல்புடன் குண்டசாலை பிரதேச சபைக்கு போட்டியிட்டபோது முஸ்லிம்களுக்கு எதிரான இன்னொரு வன்முறை சம்பவம் இடம்பெறலாம் என அனுமானம் செய்தேனும் ஆணைக்குழு ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்திருந்ததா? நாம் அறிந்த வரையில் அவ்வாறு எதுவும் இல்லை. பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேசத்தின் ஏனைய சமயத் தலைவர்கள் கூட அவரது இனவாத செயற்பாடுகள் குறித்து ஆணைக்குழுவின் முன்னிலையில் கூறியிருந்தும்கூட அவருக்கு சுதந்திரமாக மக்கள் பிரதிநிதியாக தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்குக் காரணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுதியற்ற கொள்கைகளே என்பதை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

 

பிரதேச செயலாளர்கள் போன்ற அரச நிர்வாகத் துறையினரிடமிருந்தும் ஆணைக்குழு சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதனைத் தொகுத்துப் பார்க்கும்போது அந்த சாட்சியங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரங்கேறிய வன்முறை பற்றி உண்மைத்தகவல்கள் வெளிப்படுத்தப்படாத நிலையையே காணக்கிடைக்கிறது. அந்த சாட்சியங்கள் தாக்குதல்களின் பின்னர் சமூக நலனோம்பல், நட்டஈடு வழங்குதல் போன்ற விடயங்களிலிருந்து அவர்களது நிர்வாக விடயப்பரப்புக்கு முக்கியமான கூற்றுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஆணைக்குழுவுக்கு இனவாதத்தை விட முக்கியமானவையாக இருப்பவை நிர்வாக பிரச்சினைகள்

 

ஆணைக்குழு அந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக தீயணைக்கும் படையிடம் உள்ள வளங்கள், அவர்களைப் பணிக்காக விடுவிப்பதில் உள்ள பிரச்சினைகள், நிர்வாக நெருக்கடிகள், ஆளணிப் பற்றாக்குறை போன்ற விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழு விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது. அவை அனைத்தும் கிளர்ச்சிகள் கலவரங்கள் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்துவதில் முக்கியமான விடயங்களாக இருந்தாலும் மனித உரிமைகள் ஆணைக்குழு தமது விசாரணை செயல் முறையில் அவ்வாறான விடயங்களை உப தலைப்புகளாகவும் இரண்டாம் நிலை விடயங்களாகவும் கருதி, தாக்குதல் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் வகைக்கூறல் ஆகியவற்றை முதன்மையானவையாகக் கருதியிருந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புத்துறை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர்வதற்கும், அவர்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணி உருவாவதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். பாதிக்கப்பட்ட முறைபாட்டாளர்களும் சாட்சிகளும் ஆணைக்குழுவிடம் அதையே எதிர்பார்த்திருந்தனர்.

 

இவை அனைத்திற்கும் நடுவே அறிக்கை தாமதமாதல் தொடர்பிலும் ஆணைக் குழு தன்னிலை விளக்கம் அளிக்கிறது.

 

அதற்கு முன்னரும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஏழு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களை கூறி வந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் அறிக்கையை தொகுப்பதில் குறைகள் உள்ளன எனவும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் மொழிபெயர்ப்புப் பணி நிறைவடையவில்லை எனவும் கூறப்பட்டது. அதற்கிடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைவர்களும் ஆணையாளர்களும் மாறியமையும்  தாமதத்துக்குக் காரணமாகக் கூறப்பட்டது. மொழிபெயர்ப்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டாலும் இறுதியில் ஆங்கில மொழிக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அறிக்கையாக வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் அது ஒரு அடிப்படையற்ற பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.

 

பாதிக்கப்பட்டவர்கள், முறைப்பாட்டாளர்கள், மற்றும் சாட்சிகளில் பெரும்பாலானோர் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். ஆணைக்குழு அரசகரும மொழிக்கொள்கையையும் மீறியுள்ளது. இறுதியில் தன்னிலை விளக்கமாக மிக விந்தையான ஒரு காரணம் கற்பித்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2021 ஆம் ஆண்டின் கொவிட் பெருந்தொற்று நிலைமை மற்றும் 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி என்பன அறிக்கை தாமதமானதற்கு காரணங்களாக அமைந்ததாக ஆணைக்குழு கூறுகின்றது. ஆனால் இந்த ஏழு ஆண்டுகள் முழுவதும் மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான சம்பவக் கற்கைகள் கொண்டமைந்த பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளதை நாம் மறத்தலாகாது. சிறைச்சாலைகள் தொடர்பான நிலைமைகள், மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான சம்பவக்கற்கை அறிக்கை மற்றும் ரம்புக்கணை தாக்குதல் பற்றிய விசாரணை அறிக்கை என்பன அவற்றுள் சிலவாகும்.

 

இறுதியாக மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று மிகவும் மரபார்ந்த சில முன்மொழிவுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இந்த அறிக்கையை வெளியிட்டது.

 

சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சு, இளைஞர் விவகாரம், விளையாட்டு, மகளிர் மற்றும் சிறுவர், அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு முதலிய அமைச்சுகளுடன் தொடர்புடையதாக வெளியிடப்பட்ட அனைத்து முன்மொழிவுகளுமே புதிதாக முன்வைக்கப்பட்டவை அல்ல. மேலதிக முன்மொழிவுகளில் ICCPR சட்டத்தின் 3 ஆம் பிரிவு தொடர்பில் உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றால் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைவாக செயற்படுத்துதல் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதைத் தவிர இறுதியில் காணப்படும் ஒரே ஒரு குறிப்பிடத்தக்க முன்மொழிவாக அமைவது அரச அதிகாரிகளால் இழைக்கப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்வதற்கான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவு ஆகும்.

 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அன்றைய நாள் தலைவராகவும் விசாரணைக் குழுவின் முதன்மை உறுப்பினராகவும் இருந்த கலாநிதி தீபிகா உடகம மற்றும் அப்போதைய ஆணையாளர் சட்டத்தரணி கஸாலி ஹுசைன் உள்ளிட்ட குழுவுக்கு கடைசியாக நாம் சொல்ல விரும்புவது என்னவென்றால், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் பல துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உங்களது குழு முன்னிலையில் வந்து சாட்சியம் அளித்ததும் முறைப்பாடுகளை முன்வைத்ததும் நீதியை நிலைநாட்டுவதற்கேயன்றி உண்மையான குற்றவாளிகளுக்கு வெள்ளை பூசுவது போன்ற அறிக்கையொன்றின் மூலம் மட்டும் திருப்தியடைவதற்காக அல்ல.

 

அறிக்கையின் முன்மொழிவுகளையும் பாதிக்கப்பட்டவர்களது மொழியிலோ, அல்லது நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியிலோ வெளியிடாததை அடிப்படை மனித உரிமை மீறலாகத் தீர்மானிக்குமாறு எவரேனும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றால் அது வியத்தகு விடயமாக இராது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் 2019ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட “இலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வினை உறுதி செய்வதற்காக அது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு தமது முன்மொழிவுகளை நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவிக்குழு” முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளை பின்வருமாறு எடுத்துக்காட்டுகிறது: “களுத்துறை, காலி, அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பொலிஸ் திணைக்களம் இழைத்திருக்கும் ‘மன்னிக்க முடியாத’ அளவிலான தாமதங்கள் மற்றும், வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யும் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அசமந்தப்போக்கு என்பன தொடர்பில் ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் பலவீனங்கள் மேலும் மேலும் மோதல்கள் உருவாவதை ஊக்குவிப்பதோடு, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் இந்தச் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருத்தல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற சுயாதீனமான நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தி அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக தாமதமின்றி செயற்படுவதற்கான தேவை உள்ளதால் அவ்வாறான பலவீனங்களை கவனிப்பது அவசியமாகும்.”

 

ஆணைக்குழு இவ்விடயத்தை கவனத்தில் கொண்டதா? கண்டி மாவட்டத்தில் நிகழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையை விட நாடாளுமன்ற அறிக்கையின் மேற்குறிப்பிடப்பட்ட வரிகள் பெயரளவினேனும் எவ்வளவு பலம் பொருந்தியனவாக உள்ளன? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *