மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை “பிரஜா சக்தி” தேசிய வேலைத்திட்டத்துக்கு பெற்றுக்கொள்ளாமை காரணமாக அவர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கலான நிலை குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
“2025 ஓகஸ்ட் 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட இந்த ‘பிரஜா சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் குறித்து நோக்குங்கள். இந்த பிரஜா சக்தி இயக்கத்தின் ஊடாக செய்யப்படுவது என்ன? இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம், மாகாண சபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை கேள்விக்குறியாக்கி, அவர்களை முடக்குவதே இதன் மூலம் நடைபெறுகிறது.”
“பிரஜா சக்தி” தேசிய வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு எதிர்க்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வறுமையை ஒழிப்பதும், அபிவிருத்தி முன்மொழிவுகளைக் கொண்டு வருவதுமே இதன் நோக்கம் என்றால், ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளுக்கு உள்ள பணி என்ன? ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படாதது ஏன்? அமைச்சர்கள், செயலாளர்கள், ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு மாத்திரமே இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.”
இந்நாட்டின் வறுமையை ஒழிப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ள கல்வித்துறையானது, வறுமை ஒழிப்புக்கான ஒரு அணுகுமுறையாக இதுவரை முறையாக இனங்காணப்படாததோடு, அத்தகைய மூலோபாயங்களில் அதிக கவனம் செலுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையைத் தயாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் ஊடாக வறுமையில் தாக்கம் செலுத்தும் சுகாதாரம், போக்குவரத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக 2025 ஜூலை 01ஆம் திகதியன்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
அதன்படி ‘இப்புதிய அணுகுமுறையின் ஊடாக சமூக வலுவூட்டல் பொறிமுறையைச் செயற்படுத்துவதற்காக மூன்று புதிய கட்டமைப்பு மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன’ என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“தேசிய மட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் ‘பிரஜா சக்தி’ தேசிய கொள்கைச் சபை நிறுவப்பட்டுள்ளதுடன், ஒன்பது அமைச்சர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். இவ் வேலைத்திட்டத்தை புதிய கட்டமைப்பு மாற்றங்களினூடாக செயற்படுத்துவது தேசிய கொள்கைச் சபையின் நோக்கமாகும். அதன் அழைப்பாளராக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே அவர்கள் செயற்படுகிறார்.”
கொள்கைச்சபையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக அமைச்சரின் தலைமையில் பிரஜா சக்தி தேசிய வழிகாட்டல் குழுவொன்றும் நிறுவப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களாக ஒன்பது அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் செயற்படுவதுடன் குழுவின் செயலாளராகவும் அழைப்பாளராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) செயற்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2025 ஜூலை 01ஆம் திகதியன்று அறிவித்திருந்தது.
மேலும் அந்த அறிவிப்பில் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் சமூக அபிவிருத்தி சபையை நிறுவி, அதன் மூலம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், அமைச்சுகள் மற்றும் மாகாண சபைகள் ஊடாக தேசிய மட்டம் வரை இந்த தேசிய வேலைத்திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இந்தக் குழுவின் தலைவர் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரால் நியமிக்கப்படுவதோடு, செயலாளராக பிரதேச செயலகத்தினூடாக இணைக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்படுவார்.”
சமூக வலுவூட்டலுக்கான அபிவிருத்தித் தீர்மானங்களை எடுப்பதற்கும், குறிப்பாக சமூகக்காப்பு வழங்கப்பட வேண்டிய நபர்களை இனங்காண்பதற்கும் இந்தச் சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இதற்காக அவ்வந்தப் பிரதேசங்களின் அறிஞர்கள், தொழில்முனைவோர், வர்த்தகர்கள், கைத்தொழில் அதிபர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் மேலும் அறிவித்திருந்தது.
இவ்வாறானதொரு சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்னவென்று கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இதைவிட மக்கள் வாக்குகள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதை முழுமையாக நிறுத்தி விடலாம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
“அப்படியென்றால் இந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதாக்கள், தவிசாளர்களுக்கு செய்வதற்கு எஞ்சியுள்ள பணி என்ன? அப்படியாயின் இந்த சபைகள் அனைத்தையும் கலைத்துவிடுங்கள். இந்நாட்டில் தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதை நிறுத்திவிடுங்கள்.”
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்து, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் விருப்பதற்கு அமைய ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குந் ஒரு தலைவரை நியமிக்க அதிகாரம் வழங்குவது எவ்வகையான சட்டம் என தமிழ் மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
“60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்திய இயக்கமாக இருந்துவிட்டு, தற்போது ஜனநாயக ரீதியாக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டதாக நாமே சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளையும் ஓரங்கட்டிவிட்டு ஜனாதிபதிக்குத் தேவையானவர்களை நியமிப்பதுதான் ஜனநாயகமா? இது அப்பட்டமான அராஜகம்! எமது கண்களுக்கு முன்னாலேயே இந்த பிரஜா சக்தி உறுப்பினர்களைக் கொண்டு நீங்கள் ஒரு பெரிய அழிவைச் செய்கிறீர்கள்.”
எதிர்க்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்து, தோல்வியடைந்த அரசாங்கத் தரப்பு வேட்பாளர் ஒருவரை ‘பிரஜா சக்தி’ தலைவராக நியமிப்பதற்கான பின்னணியை உருவாக்குவது அரசாங்கத்தின் அராஜகம் இல்லையா என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவர் கேள்வி எழுப்பியியுள்ளார்.
“ஒரு வட்டாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி இருக்கிறார். ஆனால் அதே வட்டாரத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை உங்கள் கட்சியிலிருந்து ‘பிரஜா சக்தி’ தலைவராக நியமிக்கிறீர்கள். இந்நாட்டில் இப்போது இயங்குவது அரசாங்கமா அல்லது ஒரு கட்சியா? இது ஜனநாயக ஆட்சியா அல்லது தேசிய மக்கள் சக்தியின் அராஜகமா என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.”
இதற்கு முன்னர் நாட்டின் அதிகாரத்திலிருந்த ஆட்சியாளர்கள் ஆயுதங்கள் மூலம் தமிழ் மக்களை இனவழிப்பு செய்ததைப் போலவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மிகவும் நூதனமான முறையில் சுற்றறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் ஊடாக மற்றுமொரு பாரிய இனவழிப்புக்கு முயல்வதாக தமிழ் மக்கள் பிரதிநிதி அரசாங்கத்தின் மீது கடுமையாகக் குற்றம் சுமத்தினார்.
“கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் மீது நீங்கள் கல்லெறிந்தீர்கள்; விமர்சித்தீர்கள்; அவர்கள் தவறு செய்ததாகக் கூறினீர்கள். ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அன்று அவர்கள் ஆயுதங்கள் மூலம் எமது மக்களைக் கொன்று குவித்தார்கள், இனவழிப்பு செய்தார்கள். இன்று தேசிய மக்கள் சக்தி மிகவும் நூதனமான முறையில், சுற்றறிக்கைகள் ஊடாக, ஆவணங்கள் ஊடாக மற்றுமொரு பாரிய இனவழிப்புக்கு, ஓர் இனத்தை அழிப்பதற்கு முயற்சி செய்கின்றது.”
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக செயற்படுதப்படும் சமூக வலுவூட்டலுக்கான பன்முக அணுகுமுறையைக் கொண்ட ஒரு வேலைத்திட்டம் என விவரிக்கப்படும் ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டம், 2025 ஜூலை 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவர் பல்பரிமாண வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 95.3 சதவீதமானோர் கிராமப்புற பிரதேசங்களிலும் தோட்டப்புறங்களிலும் வசிப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2025 ஜூலை 1ஆம் திகதியன்று அறிவித்திருந்தது. இந்நிலைமை தொடர்வது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகளைப் பாதிக்கும் என்பதால், சமூகத்தை வலுவூட்டும் பணியும், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மக்களைத் தெரிவு செய்து முறையான சமூகக்காப்புக்கு இட்டுச் செல்லும் பணியும் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

