தம்மை ஒரு இடதுசாரி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் நாட்டின் இனங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை வெவ்வேறு முறையிலேயே கையாள்வதாக குற்றம் சுமத்தியுள்ள வடக்கின் மூத்த தமிழ் மக்கள் பிரதிநிதி, அரசாங்கம் அடிக்கடி கூறுவது போன்று அனைத்து இனங்களையும் சமமாக நடத்துவதும் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதும் எப்போது நடைமுறைக்கு வருமென கேள்வி எழுப்பியுள்ளார்.
“நீங்கள் இந்நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறீர்களா, அல்லது இதற்கு முன்னர் இருந்தவர்கள் செய்த தவறுகளைத் திருத்தி நீதியை நிலைநாட்டப் போகிறீர்களா, அல்லது நீங்களும் தொடர்ந்து அதே விடயங்களையே செய்து கொண்டிருக்கப் போகிறீர்களா? உங்களை இடதுசாரிகள் என்றும், இந்த நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகவும், அனைவரையும் சமமாக நடத்தப் போவதாகவும் நீங்கள் தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அந்த நியாயம் சம்பந்தமான கூற்றுக்களை நீங்கள் எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள்?”
யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கில் மக்கள் வணங்கி வந்த பௌத்தம் அல்லாத இரண்டு வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுள்ள விதம் குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்தத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.
“தலைமை தாங்கும் உறுப்பினரே, குறிப்பாக 2010 ஆம் ஆண்டு வரை வலிகாமம் வடக்கின் மயிலிட்டி, தோலக்கட்டி, தையிட்டி, பலாலி மற்றும் வசாவிளான் போன்ற பகுதிகளில் இருந்த இந்து ஆசிரமங்கள், வரசித்தி விநாயகர்— நான் இந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறேன்— வரசித்தி விநாயகர் ஆலயம். இது அந்தப் பிரதேச மக்கள் 2010 இல் எடுத்த புகைப்படம். ஆனால், இந்த ஆலயம் அடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஆலயம் இருந்ததற்கான அடையாளமே இல்லை.”
மயிலிட்டியில் அமைக்கப்பட்டிருந்த தொல்பொருள் பெறுமதிமிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அங்கு குற்றம் சுமத்தியிருந்தார்.
“மயிலிட்டியில் அமைந்திருந்த புனித காணிக்கை மாதா தேவாலயம். இந்த தேவாலயம் 2010 ஆம் ஆண்டு வரை முழுமையாக இருந்தது. நல்ல நிலையில் இருந்த தேவாலயம் 2010 இற்குப் பின்னர்— இது 150 ஆண்டுகள் பழமையான, தொல்பொருள் பெறுமதிமிக்க உள்ள ஒரு தேவாலயம். இந்தத் தேவாலயமும் மகிந்தவின் அரசாங்க காலத்தில் இராணுவத்தினால் இடித்து அழிக்க்கப்பட்டுள்ளது.”
தொல்பொருள் அடையாளத்தைக் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் சைவ சமய வழிபாட்டுத் தலங்களை அவ்வாறு அழித்துவிட முடியுமென்றால், தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக அபகரித்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையொன்றை அகற்றுவது எந்த வகையில் தவறாகும் என தமிழ் மக்கள் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.
“இப்படியான தொல்பொருள் அடையாளமும் வரலாறும் கொண்ட ஆலயங்கள், இந்து வழிபாட்டுத்தலங்கள், சைவ சமய வழிபாட்டுத்தலங்களை இடித்து அழிக்க முடியுமென்றால், ஏன் பலவந்தமாக, ‘பை போர்ஸ்’ ஆக கட்டப்பட்டிருக்கும் பௌத்த விகாரையை இடிப்பது மட்டும் தவறாகிறது? உங்களால் இந்து ஆலயங்களை இடிக்க முடியும், பிடுங்கி எறிய முடியும். கத்தோலிக்க தேவாலயங்களை அழிக்க முடியும். ஆனால் பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும்— நீங்கள் எப்போது இனங்கள் மீது அன்பு காட்டுவீர்கள்? அந்த தேசிய ஒருமைப்பாடு எப்போது வரும்? எனவே, முதலில் உங்கள் மனங்களை நன்றாக மாற்றிக் கொள்ளுங்கள்.”
திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள், அந்த விகாரையை அவ்விடத்திலிருந்து அகற்றி தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கின்றனர்.
நயினாதீவு புராண ரஜமகா விகாரையின் விகாராதிபதி மற்றும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்கர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரரும் தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளை யுத்தத்தின் ஊடாகக் கையகப்படுத்தி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையானது உண்மையான ‘திஸ்ஸ விகாரை’ அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஆட்சியின் கீழும் வடக்கு மக்கள் இராணுவத்தின் கடும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாழ்வதே வடக்கு கிழக்குக்கும் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இடையிலான பாரிய வேறுபாடாக காணப்படுவதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்தத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் 2026 ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் மேலும் வலியுறுத்தினார்.
“சிங்கள மக்களுக்கு உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் உங்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மையாக, சுத்தமாக இருக்க வேண்டுமானால், முதலில்— யாழ்ப்பாணம் வேறு, அங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது என உங்கள் அமைச்சர்கள், உங்கள் பிரதிநிதிகள் கூறுகிறார்கள். என்ன வித்தியாசம்? உங்கள் அடக்குமுறையின் வித்தியாசம் இன்றும் அங்கே இருக்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவம் நிலைபெற்றுள்ளது. முற்றாக இராணுவத்தின் நெருக்கடிக்குள்ளேயே மக்கள் இருக்கிறார்கள். அது ஒரு வித்தியாசம்தான். முதலில் அதை அகற்ற வேண்டும்.”

