நாடு கடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் இணைந்து பணியாற்றிய அறிக்கை

பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு இழப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நாடு கடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரு அறிக்கை, சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பரவலாக மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்கள், தங்களுக்கு அவசரமாக நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான உளவியல் மற்றும் சமூக ஆதரவு தேவை எனக் கூறுவதாக, தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) இலங்கையில் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இழப்பீடு என்பது பிரதானமாக உளரீதியான நிவாரணமே ஆகும்-பாதிக்கப்பட்டவர்களை உளரீதியாகவும், சிகிச்சை மூலமாகவும் குணமடைவதற்கு உதவுவதே. இரண்டாவதாக, இந்த அட்டூழியங்களுக்காக இலங்கை ஆட்சியாளர்களைப்
பொறுப்புக்கூற வைக்கவேண்டும்” இவ்வாறு பாதிக்கப்பட்டு, உயிர்பிழைத்த ஒருவர் கூறியுள்ளார்.

2009 இல் முடிவடைந்த ஆயுத மோதலின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் பிற வகையான பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பிய ஐம்பது ஆண்கள் மற்றும் பெண்களுடன் ITJP கலந்தாய்வுகளை மேற்கொண்டுள்ளது.

போர் நடைபெற்ற இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அத்தகைய பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதில் காணப்படும் பாதுகாப்பற்ற நிலைமையாலும் அனுமதி கிடைக்காது என்பதாலும் இந்த ஆய்வு லண்டனில் நடத்தப்பட்டது.

மோதல் தொடர்பான பாலியல் வன்முறையால் இடம்பெயர்ந்த தமிழ் உயிர் பிழைத்தவர்களின் நீதி மற்றும் இழப்பீட்டுத் தேவைகள் என்ற 68 பக்க அறிக்கையில், விசாரணைகளில் பங்கேற்பாளர்களின் சொந்த துன்பங்களை சித்தரிக்கும் கலைப்படைப்புகள் காணப்படுகின்றன.

போருக்குப் பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் வசித்து வரும் உயிர் பிழைத்தவர்கள், தங்கள் அவசரத் தேவைகளை அடையாளம் கண்டுள்ளனர்.

முழுமையான உளவள மற்றும் ஆரோக்கிய ஆதரவு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு, சேர்ந்திருக்கும் உணர்வையும் சமூகத்தையும் மீளவும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள், சட்டரீதியான தீர்வுகள், மற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டநடவடிக்கைகள் எடுத்தல் என்பன இதில் உள்ளடங்கும்.

“மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை, பாதுகாப்பான சூழல், ஆரோக்கியமான மனநிலை, தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு” என்பது அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

உலகளாவிய உயிர் பிழைத்தவர்கள் நிதியத்தின் (GSF) நிதி உதவியுடன் ITJP தயாரித்த அறிக்கை, தனிநபர்கள் மற்றும் பரந்த தமிழ் சமூகம் மீது பாலியல் வன்முறையின் பேரழிவு மற்றும் நீண்டகால விளைவுகளை தெளிவாகக் காட்டுகிறது.

“தாக்கம் ஒரு பெரிய அதிர்ச்சி போன்றது” என ஒருவர் கூறினார், மற்றொருவர், “நாங்கள் அவமானமானச் சின்னமாக பார்க்கப்படுகிறோம்” எனக் கூறினார்.

இலங்கையில் இருந்தாலும் சரி, நாடுகடத்தப்பட்டாலும் சரி, அச்சம், களங்கம் மற்றும் தனிமையால் வாழ்க்கையை தனிமை வாட்டுவதாக உயிர் பிழைத்தவர்கள் விபரித்தனர்.

சீருடை தரித்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பயங்கரக் கனவுகள், திடீர் நினைவுகள் என்பன இப்பாதிக்கப்பட்டவர்களை அவர்களது குடும்பத்திடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் விலக்கி வைத்திருக்கின்றன. மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்

“பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கிணற்றில் குதித்தோ அல்லது தூக்கில்தொங்கியோ தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்வதைத் தவிர வேறெந்தத் தெரிவும் இல்லை” என பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார். தன்னுடைய உடலிலுள்ள தழும்புகள் பற்றி தன்னுடைய சிறுமகன் தன்னிடம் கேட்டபோது தனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என பாதிக்கப்பட்ட ஒரு தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள், முதலில் தாம் அரசால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் தங்களது சொந்தச் சமூகத்தினாலும் பாதிப்படைந்ததாகவும், தமது இரட்டைப் பாதிப்புப் பற்றிக் கூறினார்கள். “இது எங்கள் குடும்பத்திற்கே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது – எங்களது சொந்தக் குடும்பமே எங்களை விமர்சித்து, ஒரங்கட்டுகின்றது, எங்கள் சமூகமும் அதையேதான் செய்கின்றது”

“சில நேரங்களில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் பாலியல் தாக்குதல்களுக்கு நாங்கள் ஆளாக்கப்படுகின்ற நேரத்தில், தமிழ்ச் சமூகத்திலுள்ள இதர மக்கள் எங்களைத் துஷ்பிரயோகம் செய்து, அதனையே எமக்கும் செய்ய முயல்கின்றனர்.”

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் உள்ளடக்கிய குழு, லண்டனில் ஒரு உளவியல் சமூக திட்டத்திற்காக வாரந்தோறும் சந்தித்ததாக, தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் ஜனவரி 15, 2026 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது, இதற்கான நிதியுதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலும் மற்றும் இலங்கையில் வைத்திய மற்றும் உளவியல் சிகிச்சையை அணுகுவதில் உள்ள சிரமங்களை அவர்கள் விபரித்தனர்.

பாலியல் வன்முறையில் இருந்து தப்பிய ஒரு கலப்பு-பாலின தமிழ் குழு ஒன்று தங்கள் அனுபவங்களைப் பற்றி கூட்டாகப் பேசிய முதல் சந்தர்ப்பம் இது என்று ITJP கூறியது. “இந்தக் கலந்தாய்வில் கலந்துகொண்ட பின்னர், பாலியல் வன்முறைகளால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொண்டேன். இது முக்கியமான உண்மை” என இன்னொரு பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

இதுவரை பேசப்படாத இந்த விடயத்தைப் பற்றிப் பேசுவதற்கு பங்கேற்பாளர்கள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர், ஆயினும் பேசுவதற்குப் பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதை உணர்ந்த பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இதுபற்றிக் உரையாடத் தொடங்கினார்கள்: “பாதிப்புக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் கண்ணாடி முன்னால் நின்று எங்களையே எம்மால் பார்க்கமுடியவில்லை. ஆனால் இப்போது எங்களால் அதனைச் செய்யமுடியும். இது ஒரு பெரும் சாதனையே,” இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்முறைகள் மாத்திரமன்றி, அதி பயங்கரமான மீறல்களையும் எதிர்கொண்டார்கள். ‘பொதுவாக, அவர்களும் அல்லது அவர்களது அன்புக்குரியவர்களும் வலுக்கட்டாயமாக சண்டைக்கு ஆட்சேர்க்கப்பட்டார்கள், திரும்பத் திரும்ப இடம்பெயர்ந்தார்கள், குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணைத் தாக்குதல்களுக்கும் ஆளானார்கள், பட்டினியால் வாடினார்கள், வைத்திய உதவியின்றித் தவித்தார்கள், தமது
விருப்பத்திற்கு மாறாகத் தடுத்துவைக்கப்பட்டார்கள், சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதையோ அல்லது விசாரணை ஏதுமின்றிச் சுட்டுக்கொல்லப்படுவதையோ நேரடியாகக் கண்டார்கள்” என ITJP-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இந்த இழப்பீட்டு ஆய்வு குறிப்பாக பாலியல் வன்முறையில் கவனம் செலுத்துகிறது, மேலும் குற்றங்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் விடயத்தில் இன ரீதியாக குறிவைக்கப்பட்ட வன்முறையின் பரந்த வடிவத்தைக் காட்டுகிறது.

“தமிழர்களுக்கான தனித்துவமானதும் கலாச்சார ரீதியிலானதுமான அடையாளங்களையும், மனோதிடத்தையும் அழித்தொழிக்கும் நோக்குடன் நடத்தப்படும் சித்திரவதையின் ஒரு பகுதியாகவும் தனிநபர்களை அவமானப்படுத்துவதற்கும் நன்றாகத் திட்டமிட்டு வேண்டுமேன்றே இத்தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன”.

“தாங்கள் அனுபவித்த பாலியல் வன்முறை தங்களது முழுச் சமூகத்தின் மீதும் ஆழமான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்: ‘பெண்களை, ஏன் பெண்களின் சடலங்களைக் கூட எவ்வாறு சிறிலங்கா இராணுவம் துஸ்பிரயோகம் செய்தது என்பது பற்றிய காணொளிகள் வெளிவந்து, எங்கள் சமூகத்தின்மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” என அவர்கள் கூறினர். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே அவர்களின் பெரு விருப்பம். “அவ்வாறு நடந்தால் அது எமக்குச் சிறிய ஆத்ம திருப்பதியைக் கொடுக்கும்”

இலங்கையில் தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கை, 2009 இல் போர் முடிவடைந்ததிலிருந்து, முன்னாள் மோதல் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் தமிழர்களை குறிவைத்து கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்வதாகக் கூறுகிறது.

“ஐ. நா. அமைப்புக்கள் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் வன்முறைகள் நடாத்தப்படுவதாகத் திரும்பத்திரும்ப வெளிப்படுத்தியபோதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதனை மறுப்பதுடன், இக்குற்றங்கள்
நடைபெறவில்லை என்றும் சொல்லிவருகின்றது.” சர்வதேச சட்டப் பொறுப்புக்களை மீறும் இந்த
மறுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாரதூரமான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் வேரூன்றிய தண்டனை விலக்குரிமை மற்றும் சர்வதேச சமூகம் தீர்க்கமாக செயல்படத் தவறியது ஆகிய இரண்டிலும் பல பங்கேற்பாளர்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினர். “முகவர் அமைப்பு”தொடர்பிலான விவாதம் அவர்கள் மத்தியில் ஆழமாகப் புதைந்திருந்த உணர்வுகளை வெளிப்படுத்தி, தம்மைவிட்டு விலகாத துரோகம் மற்றும் அநீதி உணர்விற்கு ஒரு தீர்வு வேண்டும் கோரிக்கையாக மாறிய காரசாரமானதாக மாறியது:

“எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இப்போரில் இறந்துபோனார்கள். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகம் எதனையுமே செய்யவில்லை. தற்போது நீங்கள் ‘முகவர் அமைப்புக்கள்” பற்றி எம்மிடம் கதைக்க விரும்புகின்றீர்களா? சர்வதேச சமூகமே எதுவும் செய்யாதபோது, எங்களால் எதைத்தான்
செய்யமுடியும்?”

‘சட்ட முறைமையில் எமக்கான தீர்வு கிடைக்கப்போவது கிடையாது. நாம் ஒருவரைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு முயன்றால்கூட, அவர்கள் இதிலிருந்து தப்புவதற்கு மேலும் பத்து முறைகளைக் கண்டுபிடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை,’ எனப் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களது உள ஆரோக்கியத்திற்கும், கௌரவத்திற்கும், அவர்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி வருவதற்கும் நீதியும் பொறுப்புக்கூறலும் அத்தியாவசியமானவை என்பதை இக்கலந்தாய்வு காட்டுகின்றது. பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகரமான சர்வதேச பொறுப்புக்கூறல் கட்டமைப்பும், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய முழுமையான பரிகாரங்களும், நீடித்து நிலைக்கக்கூடிய உளவளத்துணையும் அவசியம் என்பதை இது வலியுறுத்துகின்றது.

இலங்கையில் நடந்துவரும் மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும், தண்டனையின்மையினையும் மறுதலிப்பினையும் முடிவுக்குக் கொண்டுவரும்படியும், தொடர்ந்து நடைபெற்றுவரும் அடக்குமுறைக்கு எதிராகத் தங்கள் மௌனத்தை உடைக்கும் பாதிக்கப்பட்ட உயிர்பிழைத்தவர்களின் குரல்களை வலுப்படுத்தும்படியும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் உறுப்புநாடுகள், நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் ITJP அழைப்பு விடுக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *