இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழங்கிய பதிலளிப்புக்கு ஊடகவியலாளர்கள் கடும் விமர்சனம்

பாரிய குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் அரச பாதுகாப்புப் படையினர் தொடர்பான வழக்குகளின் தாமதப்படுத்தல்கள் குறித்து சட்டமா அதிபருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டதையடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதற்கு வழங்கிய பதிலளிப்புக்கு மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஊடகவியலாளர்களிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போதைய சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவை உடனடியாக பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி, மனித உரிமை ஆர்வலர்கள் குழுவொன்று நேற்று(21) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் நடத்திய அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர, சட்டமா அதிபருக்கு எதிராக நீதி கோரும் மக்களின் எழுச்சியைக் கண்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் அச்சமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

“இதற்கு எதிராக சட்டமா அதிபர் மாத்திரமன்றி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் அச்சமடைந்துள்ளனர். அதாவது, ஒரு நீதிமன்றச் செயன்முறை தெளிவாக மிகவும் அநீதியான முறையில் நடைபெறும்போது, அதற்கு எதிராக முன்வரும் அந்தத் தாய்மார்களை, அந்தச் சட்டத்தரணிகளை மற்றும் அந்தப் பிரச்சினையை எழுப்பும் பாதிப்புக்குள்ளானோரைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். ஏனென்றால், இவர்களுடன் பெரும் திரளான மக்கள் இணைந்துகொள்வார்கள் என அவர்கள் பயப்படுகிறார்கள்.”

சட்டமா அதிபரது வகிபாகம் மற்றும் சுயாதீனமான தன்மையில் செல்வாக்கு செலுத்தும் வகையில் சமூக வலைதளங்கள் ஊடாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் தலையீடுகள் ‘நியாயமற்றவை’ என ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் ஊடாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடுமையான கவலையைத் தெரிவித்திருந்தது.

சட்டமா அதிபரால் முன்னெடுக்கப்படும் “நீதித்துறைப் போல்வு” பணிகளுக்கு இடையூறு விளைவிப்பது சட்டவாட்சிக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என அந்த விசேட அறிக்கையில் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியிருந்தது. ரஜீவ அமரசூரிய மற்றும் ரஜீவ கல்ஹேன ஆகியோரது கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. சட்டமா அதிபர் என்பவர் “பொதுமக்களது கருத்தை” நடைமுறைப்படுத்துபவர் அல்லர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நீதிமன்றம் கூட மக்களின் தத்துவத்துக்கு உட்பட்டதுதான் என்பதை வலியுறுத்தினார்.

“சட்டமா அதிபர் ஒரு நீதித்துறைப் போல்வு நிறுவனம் என அவர்கள் கூறுகிறார்கள். நீதித்துறைப் போல்வு நிறுவனம் மட்டுமல்ல, நீதிமன்றமே கூட மக்களின் தத்துவத்துக்கு உட்பட்டது என நாங்கள் கூறுகிறோம். இந்த நிறுவனங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே உள்ளன. தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆயிரக்கணக்கான வழக்குக் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. அதேபோன்று, அநேகமானோர் எதிர்பார்க்கும் நீதியை நிலைநாட்டும் செயன்முறைக்குத் தடையாக இருக்கும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டுள்ளது. திணைக்களத்தின் ஊழல் நிறைந்த செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் இவ்வாறு குரலெழுப்புகிறார்கள்.”

சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மற்றும் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் வழக்கொன்றில் பாதிப்புக்குள்ளான பெற்றோர் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தின் அடிப்படை நோக்கம் குறித்தும் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர அங்கு தெளிவுபடுத்தினார்.

“கன்சைட் முகாமில் கடற்படையின் அந்தக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்கு நடவடிக்கைகள் எந்தவித பின்னடைவோ தடங்கலோ இன்றி சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாகும்.”

சுயாதீன நிறுவனமான சட்டமா அதிபர் திணைக்களமும், சட்டமா அதிபரும் மக்களுக்குத்தான் சுயாதீனமாக இருக்க வேண்டும் எனவும் தரிந்து இதன்போது கடுமையாக வலியுறுத்தினார்.

“சட்டமா அதிபர் சுயாதீனமானவர், சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு சுயாதீனமான நிறுவனம். சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள் ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகள் இரகசியமாகச் சென்று கூட்டங்களை நடத்தி, வழக்குகளில் செல்வாக்கு செலுத்த முடியாது. அது ஒரு சுயாதீனமான நிறுவனமாக இருக்க வேண்டும். ரணில் விக்ரமசிங்கவின் வழக்குகளில் செல்வாக்கு செலுத்த முடியாது. முன்னாள் கடற்படைத் தளபதிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் விருப்பத்துக்கேற்ப சட்டமா அதிபர் செயற்பட முடியாது. அது ஒரு சுயாதீனமான நிறுவனமாக இருக்க வேண்டும். எஸ்ரிஎப்எஸ்ரிஎப் படைப்பிரிவினரால் மண்டியிடச் செய்து சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சம்பவங்களுக்கு நீதி வழங்காமல், எஸ்ரிஎப் இன் விருப்பத்துக்கேற்ப செயற்பட முடியாது. ஏனெனில் சட்டமா அதிபர் சுயாதீனமானவராக இருக்க வேண்டும். சட்டமா அதிபர் மக்களுக்காகத்தான் சுயாதீனமாக இருக்க வேண்டும்.”

சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது அல்லது வழக்குத் தொடுப்பது தொடர்பான தீர்மானங்களை பொதுமக்களின் கருத்துகள் அல்லது உணர்வுகளின் அடிப்படையில் அன்றி, முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் சட்டபூர்வமான தன்மையின் அடிப்படையில் மாத்திரமே எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனவரி 20 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

“சட்டரீதியான முடிவுகள் சில சமயங்களில் பொதுமக்கள் கருத்திலிருந்து மாறுபடலாம். ஆனால், அத்தகைய முடிவுகளை ‘சமூக வலைத்தள வழக்கு விசாரணைகளில்’ இருந்து பாதுகாப்பதற்காகவே சட்டவாட்சியானது பேணப்படுகிறது.”

ஒவ்வொரு பிரஜைக்கும் தமக்கு எதிராக அல்லது தம்மால் முன்வைக்கப்படும் முறைப்பாடு தொடர்பாக நியாயமான மற்றும் விரைவான விசாரணையைப் பெறுவதற்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டமா அதிபரின் சுயாதீனமான தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் அதன் மூலமாகவே அனைத்துப் பிரஜைகளுக்கும் சட்டத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் தீர்மானம் அநீதியானது என எவரேனும் கருதினால், அதனை விமர்சிப்பதற்கு பிரஜைகளுக்கு உரிமை உண்டு என்றாலும், அது சட்டக் கட்டமைப்புக்குள்ளாகவே செய்யப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சட்டமா அதிபரின் தீர்மானங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ‘ரிட்’ கட்டளை மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தில் ‘அடிப்படை உரிமை’ மனு மூலமாகவோ எவரும் சவாலுக்கு உட்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு விகிதமான மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்த பின்பும், தேர்தலில் வாக்குறுதியளித்தபடி நீதியை நிலைநாட்டத் தவறியமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சரின் செயற்பாடுகளும் சட்டமா அதிபருக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் போது கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

“சட்டமா அதிபர் என்பவர் நாடாளுமன்றத்தின் நீதித்துறை அதிகாரத்திலிருந்து உருவான ஒரு நிறுவனம் அல்ல. மாறாக, நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அதிகாரத்தைப் பெறும் ஒரு நிறுவனம். எனவே, வழக்குத் தொடரும் நடவடிக்கைகளுக்கு நிறைவேற்று அதிகாரம் பொறுப்புக் கூற வேண்டும். ஆகவே, இதனை ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சரின் பொறுப்பாகக் கருத வேண்டும். நீங்கள் நீதியை நிலைநாட்டுவதாக வாக்குறுதியளித்து வந்தீர்கள் என்றால், இப்போது ஓராண்டு காலம் கடந்துவிட்டது. இன்னும் நீதி கிடைக்கவில்லை. எனவே இந்த நிறுவனங்கள் சுயாதீனமானவை அல்ல. இந்த நிறுவனங்கள் நிழல் அரசாங்கத்துடன் தொடர்புடையவை. இந்த நிறுவனங்கள் குற்றவாளிகளுடன் தொடர்புடையவை. அவர்கள் சுயாதீனமானவர்கள் அல்ல. அவர்கள் குற்றவாளிகளின் விருப்பத்துக்கேற்பவே செயற்படுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாகக் கூறுகிறேன்,” என ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் செயற்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து உருவாக்கப்பட்ட ‘Free Lawyers’ அமைப்பின் முன்னணி பிரதிநிதியான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று சட்டமா அதிபருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக சிலர் சட்டமா அதிபரையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் இலக்கு வைத்து திட்டமிட்ட முறையில் பொய்யான, அவதூறான மற்றும் வெறுப்பை விதைக்கும் கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை தமது அமைப்பு அவதானித்துள்ளதாகவும், இவ்வாறான பொய்யான, தந்திரமாகத் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை மக்களிடையே பரப்புவதன் மூலம் வெறுப்பையும் சமூக கண்ணியத்துக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துவது அவர்களது வழக்கம் எனவும் அந்த சட்டத்தரணிகள் குழு சட்டமா அதிபருக்குத் தெரிவித்தது.

வெளிநாடுகளிலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் இந்நாட்டின் யூடியூப் மற்றும் சமூக வலைதள செயற்பாட்டாளர்களும் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுத்து வருவதாக சட்டத்தரணிகள் சட்டமா அதிபரிடம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது  வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஊடகவியலாளர் சனத் பாலசூரிய “ரணிலின் வழக்கைத் நீர்த்துப்போகச் செய்யும் சட்டமா அதிபரின் முயற்சி தோல்வியடையும் அறிகுறி!  மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில்?” என தலைப்புக் குறிப்பொன்றை இட்டு சட்டமா அதிபர் தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியிட்ட தொடர்ச்சியான வெளிப்படுத்தல்கள் நல்லாட்சி காலத்தின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட சட்டமா அதிபருக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழுவின் எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்துக்காக அரச நிதியைச் செலவிட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் இருந்தபோதிலும், சட்டமா அதிபர் வழக்குத் தொடர்வதைத் தவிர்த்து வருவதே சிரேஷ்ட ஊடகவியலாளரின் முதன்மைக் குற்றச்சாட்டாகும்.

பாரிந்த ரணசிங்கவை 2024 ஜூன் மாதம் சட்டமா அதிபர் பதவிக்கு நியமித்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.

தனக்கு ஆதரவு தெரிவிக்க வந்த சட்டத்தரணிகள் குழுவிடம் பேசிய சட்டமா அதிபர், தான் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்பதால், தான் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை மேல் நீதிமன்றங்களில் சவாலுக்கு உட்படுத்துமாறு தெரிவித்தார்.

“நீங்கள் சட்டத்தை நன்கறிந்தவர்கள். நான் சட்டத்திற்கு மேலானவன் அல்ல. நான் ஏதேனும் தவறு செய்தால் மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்கிறது; உச்ச நீதிமன்றம் இருக்கிறது. அங்கு சென்று இதனை சவாலுக்கு உட்படுத்துங்கள்.”

நேற்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு அரசாங்கத்தின் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை உண்டு என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *