தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு முயற்சி

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை அரச நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போதைய ஆட்சியின் கீழும் எவ்வாறு தொடர்கின்றன என்பதை வடக்கின் தமிழ் பிரதிநிதி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட கொக்குத்தொடுவாயில் புதிய உப்பளத்தை அமைப்பதற்காக எந்த அனுமதியும் இல்லாமல் தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்களை சுத்தம் செய்யும் பணியை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனைச் சந்தித்து இந்த விடயத்தை அறிவித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, வன்னி மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

“கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள கோட்டைக்கேணி பகுதியிலுள்ள தமிழ் மக்களின்  பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து உப்பளம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்படக்கூடாதென்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை மீறி உப்பளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுத் தொடர்பிலும் மாவட்டச் செயலாளருக்கு அறிவித்துள்ளோம். இது தடை செய்யப்பட்ட ஒரு விடயம்.”

உப்பளத்தை அமைப்பதற்காக தமிழ் மக்களின் காணியை வழங்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் விடுத்த கோரிக்கை மூன்று மாதங்களுக்கு முன்னர் குழுவால் நிராகரிக்கப்பட்ட போதிலும், அவர்கள் இந்தப் பணியை ஆரம்பித்துள்ளதாக ரவிகரன் கூறுகிறார்.

கொக்குத்தொடுவாய் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் புதிய யானை வேலி அமைக்கும் திட்டம் குறித்து உள்ளூர் விவசாயிகள் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள விடயத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

“எங்களுடைய (தமிழர்களுடைய) காணிக்குள் யானை வேலியை வயலுக்கு நடுவே அமைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எங்களது காணிகளை பிடித்து வைத்துள்ளனர். அதற்கிடையில் எங்களது விவசாய காணிகளுக்குள் யானை வேலியை அமைத்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதுவொரு எல்லையில் போடப்பட வேண்டும் அல்லது காட்டுப் பகுதியில் போடப்பட வேண்டும். இது தொடர்பில் கமக்கார அமைப்புகளுக்கும் தெரியாது. மாவட்டச் செயலாளருக்கும் தெரியாமல் இந்த வேலைகள் நடைபெறுகின்றன.”

அரசாங்கப் படைகளுக்கு மேலதிகமாக, தொல்லியல் திணைக்களம் வன வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி வருவதாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *