நிட்டம்புவவில் பிரதேசத்தில் மற்றொருவரின் வாகனத்தின் QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியதாகக் கூறப்படும் நபர் ஒருவரைக் குற்றப் புலனாய்வுத் பிரிவு கைது செய்துள்ளது.
விசாரணைகளின்படி, சந்தேக நபர் ஒரு பெண்னுக்குரிய காரின் தரவுகளைப் பயன்படுத்தி புதிய QR குறியீட்டை உருவாக்கி, மோசடியாக எரிபொருள் நிரப்பியுள்ளார்.
‘1919’ என்ற இலக்கம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர், குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCID) சைபர் குற்றக் கண்காணிப்புப் பிரிவு விசாரணையை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தது.
சந்தேக நபர் பிலியந்தலையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரால் உருவாக்கப்பட்ட சட்டவிரோத QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்துக்கு உதவிய நபர்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்வதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக எரிபொருளைப் பெறுவதற்காக QR குறியீடுகளை உருவாக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட மற்றைய இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும் விசேட விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை மேலும் தெரிவித்துள்ளது.

